ஐவேளை ஃபர்ளான தொழுகையின் முன் பின் சுன்னத்

ஐவேளை ஃபர்ளான தொழுகையின் முன் பின் சுன்னத் 


அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.


கடமையான(பர்ளு) தொழுகைக்கு முன்னரும் பின்னரும் சில உபரியானத் தொழுகை களையும் அல்லாஹ்வின் தூதர் நபி( ஸல் ) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள் . இந்த உபரித் தொழுகைகளை “ சுன்னத் தொழுகை ” மற்றும் விருப்பத் தொழுகை என்று கூறுவோம். இந்த சுன்னத்தான தொழுகைகளை  கடமையான தொழுகைக்கு முன்பும், பின்பும் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பார்ப்போம். 


ஃபஜ்ருடைய முன் சுன்னத் (2)

ஸஹீஹ் புகாரி : 1169

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. 


ஸஹீஹ் புகாரி : 1170

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.ஃபஜ்ருடைய பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக இரண்டு  ரக்அத்கள் தொழுவார்கள்.


ஃபஜ்ரு, அஸர் தொழுகைக்கு 
பின் சுன்னத் இல்லை 

ஸஹீஹ் புகாரி : 581

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என நம்பிக்கைக்குரிய பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர்(ரலி) ஆவார்.


லுஹருடைய முன் சுன்னத்
( 4 அல்லது 2 )
லுஹருடைய பின் சுன்னத் (2)

ஸஹீஹ் புகாரி : 1182

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக் அத் களையும் விட்டதில்லை. 


ஸஹீஹ் புகாரி : 1165

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்த்களையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன். 


அஸருடைய முன் சுன்னத் கிடையாது எனவே 

(பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் உள்ள தொழுகை 
விரும்பியவர்கள் தொழலாம்)

( 2 அல்லது 4) 

ஸஹீஹ் புகாரி : 624

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.'

என அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார். 


மேலே கண்ட பொது ஹதீஸின் அடிப்படையில் அஸருடைய பர்ளான தொழுகைக்கு முன் தொழுது கொள்ளலாம். ஆனால் எத்தனை ரக்அத்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தவில்லை. எனவே நபி (ஸல் ) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளைக் கவனித்தால் இரண்டு ரக்அத்துகள் மற்றும் நான்கு ரக்அத்துகளும் இடம் பெற்றிருக்கிறது. இதன் அடிப்படையில் நாம் அஸருடைய முன் சுன்னத்தை இரண்டாக அல்லது நான்காகத் தொழுது கொள்ளலாம்.


மஃரிபுக்கு முன்  ( 2) 

( விரும்பியவர்கள் தொழலாம்) 

ஸஹீஹ் புகாரி : 1183

அப்துல்லாஹ் அல் முஸ்னி(ரலி) அறிவித்தார்.

மஃரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃரிபுக்கு முன் தொழுங்கள். மஃரிபுக்கு முன் விரும்பியவர்கள் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு சுன்னத்தாகக் கருதக்கூடாது. என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள். 


ஸுனன் அபூதாவூத் : 1281

 மஃரிபுக்கு முன்பு இரண்டு ரக்அத் தொழுங்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள் . பிறகு , மஃரிபுக்கு முன்பு இரண்டு ரக்அத் தொழுங்கள் . இது விரும்பியவருக்குத்தான் " என்று சொன்னார்கள் . ஏனெனில் மக்கள் அதை சுன்னத்தாக ஆக்குவதை அவர்கள் பயந்து அவ்வாறு சொன்னார்கள் . அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல் முஸனீ ( ரலி )



ஸுனன் அபூதாவூத் : 1282

 அல்லாஹ்வின் திருத்தூதர் ( ஸல் ) அவர்கள் காலத்தில் மஃரிபுக்கு முன்பு இரண்டு ரக்அத் தொழுதேன் என்று அனஸ் கூறினார்கள் . நான் அனஸிடம் , " அல்லாஹ்வின் திருத்தூதர் ( ஸல் ) அவர்கள் உங்களைத் ( தொழ ) கண்டார்களா ? என்று கேட்டேன் . அதற்கு " ஆம் , அவர்கள் எங்களைக் கண்டார்கள் . ஆனால் அவர்கள் எங்களுக்கு உத்தரவு போடவும் இல்லை , எங்களைத் தடுக்கவுமில்லை " என்று பதில் கூறினார்கள் . அறிவிப்பவர் : முக்தார் பின் ஃபுல் ஃபுல்


மஃரிபுடைய பின் சுன்னத் ( 2) 

ஸஹீஹ் புகாரி : 937

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாகவும் மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். 



இஷாவுடைய முன் சுன்னத் கிடையாது எனவே 

(பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் உள்ள தொழுகை 
விரும்பியவர்கள் தொழலாம்)

( 2 அல்லது 4) 


ஸஹீஹ் புகாரி : 624
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.'
என அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார். 


மேலே கண்ட பொது ஹதீஸின் அடிப்படையில் இஷாவுடைய பர்ளான தொழுகைக்கு முன்  தொழுது கொள்ளலாம். ஆனால் எத்தனை ரக்அத்கள்  என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தவில்லை. எனவே நபி (ஸல் ) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளைக் கவனித்தால் இரண்டு ரக்அத்துகள் மற்றும் நான்கு ரக்அத்துகளும் இடம் பெற்றிருக்கிறது. இதன் அடிப்படையில் நாம் இஷாவுடைய முன் சுன்னத்தை இரண்டாக அல்லது நான்காகத் தொழுது கொள்ளலாம். 



இஷாவுடைய பின் சுன்னத் ( 2) 

ஸஹீஹ் புகாரி : 1180

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி(ஸல்) அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும். 


வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகைகள் ( 12) 

ஸஹீஹ் முஸ்லிம் : 1320

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு நாளும் கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.

அறிவிப்பவர் : உம்முஹபீபா (ரலி)


ஸஹீஹ் முஸ்லிம் : 1323

அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (ஃபர்ள் அல்லாத) கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹரு(டைய ஃபர்ளு)க்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (ஃபர்ள்) தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; மக்களுக்கு மஃக்ரிப் (உடைய ஃபர்ள்) தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள்;மக்களுக்கு இஷாத் தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும்; இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்;இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் சஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் சஜ்தாச் செய்வார்கள்; ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

 

மேலே கண்ட ஹதீஸின் மூலம் வலியுறுத்தப்பட்ட சுன்னத் 12

ஃபஜ்ருடைய முன் சுன்னத் = 2

லுஹருடைய முன் சுன்னத் = 4 

லுஹருடைய பின் சுன்னத் = 2

மஃரிபுடைய பின் சுன்னத் = 2

இஷாவுடைய பின் சுன்னத் = 2

                                   மொத்தம் = 12


ஜும்ஆ முன் சுன்னத் கிடையாது 

எனவே பள்ளியுடைய காணிக்கை (தஹ்யத்துல் மஸ்ஜித் ) ( 2) அல்லது நஃபில்  தொழுது கொள்ளலாம். 


ஸஹீஹ் புகாரி : 1163

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்'.

என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். 


ஸஹீஹ் முஸ்லிம் : 1589

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையாற்றிக்கொண்டிருக்கையில் சுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) அவர்கள் வந்து (தொழாமல்) அமர்ந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சுலைக்! எழும்! சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழும்" என்றார்கள். பிறகு "உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுதுகொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.


இப்னுமாஜா : 1114 

நபி ( ஸல் ) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ( ரலி ) அவர்கள் வந்தார்கள் . அப்போது நபி ( ஸல் ) அவர்கள் அவரிடம் , ' நீர் ( இங்கு ) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா ? ' என்று கேட்க , அவர் ' இல்லை ' என்றார் . நபி ( ஸல் ) அவர்கள் , ' அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக ' என்றார்கள்.

 ஜாபிர்  (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் . 


ஜும்ஆ பின் சுன்னத் ( 4 அல்லது 2 )

ஸஹீஹ் முஸ்லிம் : 1597

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்! 

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 1602

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.




சுன்னத்தான தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்தது

ஸஹீஹ் புகாரி : 1187

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

'உங்களின் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றைக் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள்.'

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 


ஸஹீஹ் புகாரி : 731

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டார்கள்- சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்தபோது (அந்த இடத்திற்கு வராமல் தம் இல்லத்திலேயே) அமர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து உங்களது செயல்களை நான் கண்டறிந்தேன். மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுஙகள்.ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர! என்று கூறினார்கள்.


உபரியான தொழுகையின் சிறப்பு

(சுன்னத்தான தொழுகை மற்றும் நஃபில் தொழுகை) 

ஸுனன் அபூதாவூத் : 864

 அனஸ் பின் ஹக்கீம் அல் லப்பி என்பவர் ஸியாத் அல்லது இப்னு ஸியாத் என்பவரைப் பயந்து மதினாவிற்கு வந்தார் . அபூஹுரைராவை அவர் சந்தித்தபோது அபூஹுரைரா கூறியதைப் பின் வருமாறு கூறுகின்றார் . என்னிடத்தில் எனது தலைமுறையைப் பற்றி அபூஹுரைரா கேட்ட போது நானும் அவர்களுடைய தலைமுறையில் உள்ளவனாகவே இருந்தேன் . இளைஞனே ! உனக்கு ஒரு ஹதீஸை நான் அறிவிக்கவா ? என்று கேட்டார்கள் . அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக ! அறிவியுங்களேன் என்றேன் . நபி ( ஸல் ) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்றார் என நான் கருதுகின்றேன் என இதன் அறிவிப்பாளர் யூனூஸ் கூறுகின்றார் . மக்கள் இறுதி நாளையில் அவர்களுடைய அமல்களிலிருந்து முதன் முதலில் விசாரிக்கப்படுவது தொழுகை தான் . மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த நம்முடைய ரட்சகன் அவனோ மிக அறிந்தவனாக இருக்கும் நிலையில் தன்னுடைய மலக்குகளிடத்தில் கூறுகின்றான் . தொழுகையை சரியாக நிறைவேற்றினானா அல்லது குறைவாக நிறைவேற்றினானா ? என்று என்னுடைய அடியானுடைய தொழுகையில் நீங்கள் கவனியுங்கள் . அது நிறைவானதாக இருந்தால் அவனுக்கு நிறைவானதாகவே எழுதப்பட்டு விடும் . அது குறைவானதாக இருந்தால் என்னுடைய அடியானுக்கு உபரியான தொழுகை ஏதேனும் உள்ளதா எனப் பாருங்கள். அவனுக்கு உபரியான வணக்கங்கள் இருந்தால் எனது அடியானுக்கு அவனுடைய உபரியான தொழுகையிலிருந்து கடமையான தொழுகையை நிறைவாக்குங்கள் . பிறகு இதே விதத்தில் அமல்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறுகின்றான் என அபூஹுரைரா அவர்கள் அறிவித்தார்கள். 



அல்லாஹ்வின் நெருக்கம் 

ஸஹீஹ் புகாரி : 6502

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

அல்லாஹ் கூறினான்:

எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 



எனவே ஐவேளைத் தொழுகையின் முன் பின் சுன்னத் தொழுகைகள்,மற்றும் நஃபிலான  தொழுகைகளின் மூலமும் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்களாக மாறுவோம்.

 இன்ஷா அல்லாஹ் 



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ 


Comments