கடமையான குளிப்பு - இஸ்லாம்

கடமையான குளிப்பு - இஸ்லாம் 






அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 



இஸ்லாத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் தூய்மையில் சில காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிறது. அவை பெருந்தொடக்கு அதாவது, உடல் உறவு கொள்ளல், விந்து வெளிப்படல், மாதவிடாய் ஏற்படல், தொடர் உதிரப்போக்கு,பிரசவத் தீட்டு போன்றவை ஆகும். கடமையான குளிப்பிற்கும் நிய்யத்(எண்ணம்) பெருந்தொடக்கிலிருந்து அல்லாஹ்விற்காக தூய்மையாகிறேன் என்று நிய்யத் வேண்டும். மற்றும் உடல் முழுவதும் நனைய வேண்டும்.மேலும் குளிப்பிற்கு என்று துஆ எதுவும் ஹதீஸ்களில் இல்லை. 

கடமையான குளிப்பு முறையும் பிறகு பெருந்தொடக்கில்  நமக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்கும் ஹதீஸ்களையும் பார்ப்போம். 



அல்குர்ஆன் : 5:6

(வசனம் சுருக்கம்)

நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்துத் தேகம் முழுவதையும் சுத்தம் செய்துக் கொள்ளுங்கள்; 



கடமையான குளிப்பு முறை 

ஸஹீஹ் புகாரி : 265

'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக, நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன்கைகளில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தலையை மூன்று முறை கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்' என மைமூனா(ரலி) அறிவித்தார். 


ஸஹீஹ் புகாரி : 248

'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்' ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


ஸஹீஹ் முஸ்லிம் : 552

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று (மீண்டும்) சொன்னார்கள்.

உடனே நான், இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள் என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன்.

மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள்,தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று! என்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். 



நபி(ஸல்) அவர்கள் குளித்த பின் உளூ செய்ய மாட்டார்கள் 

இப்னுமாஜா : 579

நபி ( ஸல் ) அவர்கள் குளித்த பின் உளூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா ( ரழி ) கூறினார்கள். 


விந்து (மனீ)வெள்ளை நிற கடினமான திரவம்,

 இச்சை நீர்(மதீ)வெள்ளை நிற சாதாரண திரவம்

இப்னுமாஜா -504

" இச்சை நீர்வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும் . விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும் " என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . ( அறிவிப்பவர் அலி ( ரழி )


ஸஹீஹ் புகாரி : 291

ஒருவர் தம் மனைவியின் (இரண்டு கால், இரண்டு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உறவு கொள்பவரின் மீது குளிப்புக் கடமையாகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


ஸுனன் அபூதாவூத் : 220

 உங்களில் ஒருவர் தனது மனைவியரிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவுக் கொள்ளவேண்டும் என்று தோன்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ ( ரலி ) .


ஸுனன் அபூதாவூத் : 211

தொடர்ந்து கசிகின்ற இச்சை நீரைப்பற்றியும் , குளிப்பு கடமையாக்கும் காரியங்கள் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் நான் கேட்டேன் . அதற்கு அவர்கள் அது மதீ (இச்சை நீர் ) ஆகும். ஆண் உயிரினங்கள் அனைத்தும் இச்சை நீரை வெளிப்டுத்தக் கூடியவை தான் . அது வெளிப்பட்டுவிட்டால் உனது மர்ம உறுப்பையும் விரைகளையும் கழுவிக் கொள் . மேலும் , தொழுகைக்கு நீ உலூச் செய்வது போன்று உலூ செய்து கொள் என்று பதிலளித்தார்கள் . அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸஃது அல் அன்சாரி ( ரலி ) .


ஸுனன் அபூதாவூத் : 210 

நான் அதிகமாக மதீ வெளிப்படுவதால் சிரமத்தை அடைந்தேன் . அதிகமாக குளித்தேன் . இதை நான் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் வினவியபோது , இதற்காக நீ உலூச் செய்வதே போதுமானதாகும் என்று பதிலளித்தார்கள் . அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களே ! ஆடையில் மதீ பட்டுவிட்ட பகுதியை என்ன செய்வது என்று நான் கேட்டபோது , ஒரு கையளவு நீர் அள்ளி , அது உன் ஆடையில் கலந்து விட்டது என்று நீ காணும் அளவுக்கு தண்ணீர் தெளிப்பது உனக்கு போதுமாகும் என்று பதிலளித்தார்கள் . அறிவிப்பவர் : ஸுஹைல் பின் ஹுனைப் ( ரலி ) .



ஸஹீஹ் புகாரி : 289

'நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?' என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளூச் செய்துவிட்டுத் தூங்கலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.


ஸுனன் அபூதாவூத் : 224

 நபி ( ஸல் ) அவர்கள் குளிப்புக் கடமையாகி உண்ணவோ , உறங்கவோ விரும்பினால் உலூச் செய்வார்கள் . அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா ( ரலி ) 



ஸுனன் அபூதாவூத் : 236 

 ஒரு மனிதர் ஒரு மாதிரியான கனவு கண்டு விந்து வெளிப்பட்டதாக அவருக்கு நினைவு இல்லை. ( அவர் குளிக்க வேண்டுமா ? ) அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் வினவப்பட்டபோது , அவர் குளிக்க வேண்டும் என்று நபி ( ஸல் ) அவர்கள் பதிலளித்தார்கள் . ஒருவர்  ஒரு மாதிரியான கனவு கண்டதாக நினைவு கொள்கிறார் . ஆனால் அவர் ஈரத்தை காணவில்லை என்றால் ( அவர் குளிக்க வேண்டுமா ? ) என்று வினவப்பட்டபோது அவர் , குளிக்க வேண்டியதில்லை என்று பதிலளித்தார்கள் . அப்போது உம்மு ஸுலைம் ( ரலி ) அன்ஹா அவர்கள் ஒரு பெண் இதை ( ஈரத்தை ) காண்கிறாள் என்றால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா ? என்று கேட்போது ஆம் பெண்கள் ஆண்களை ( இது விஷயத்தில் ) ஒத்தவர்கள் தான் என்று பதிலளித்தார்கள் . அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி ) .


ஸுனன் அபூதாவூத் : 251 

முஸ்லிம்களில் ஒரு பெண்மணி , அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களே ! நான் தலையை இறுக்கமாக பின்னிக் கொள்பவளாக இருக்கிறேன் . கடமையான குளிப்பின் போது நான் ( அதனை ) அவிழ்த்து விட வேண்டுமா ? என்று வினவிய போது நீ அதன் மீது இரு கை நிரம்ப தண்ணீரை ஊற்று . இவ்வாறு ஊற்றுவதே உனக்குப் போதுமானதாகும் . பிறகு , உனது உடலில் மற்ற பகுதியில் நீரை ஊற்றிக் கொள் . அப்போது தூய்மையாகி விடுவாய் என்று அவர்கள் பதிலளித்தார்கள் . அறிவிப்பவர் : உம்மு ஸலமா ( ரலி ) .


ஸஹீஹ் புகாரி : 320

'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் உதிரப் போக்குடையவராக இருந்தார். நபி(ஸல்) அவர்களிடம் அப்பெண் (இது குறித்து) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்' என்று கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 



ஜும்ஆ வின் குளிப்பு 

ஸஹீஹ் புகாரி : 858

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

'ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.'

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 


ஜும்ஆ குளிப்பு கடமையான காரணம் 

ஸுனன் அபூதாவூத் : 353 

ஈராக் நாட்டவர்கள் சிலர் இப்னு அப்பாஸ் ( ரலி ) யிடம் வந்து இப்னு அப்பாஸே ஜும்ஆ நாளன்று குளிப்பு கடமை என்றா கருதுகிறீர்கள் என்று கேட்டனர் . அதற்கு இப்னு அப்பாஸ் ( ரலி ) பின் வருமாறு பதில் கூறினார்கள் : யார் குளிக்கின்றாரோ அவருக்கு அது தூய்மையானதும் , சிறந்ததும் ஆகும் . யார் குளிக்கவில்லையோ அவருக்கு அது கடமையில்லை . குளிப்பு எப்படி ஆரம்பமானது என்று நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் . மக்கள் கடுமையான வறுமையின் பிடியில் இருந்தார்கள் . கம்பளியை அணிந்து கொண்டும் தங்கள் முதுகுகளில் சுமைகளை சுமந்து கொண்டும் இருந்தனர் . அவர்களது ( அன்றைய ) பள்ளிவாசல் நெருக்கடியானதாகவும் முகடு தாழ்வானதாகவும் இருந்தது . அது ( பேரீத்த மர நாரினால் வேயப்பட்ட ) கூரை தான் . அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் வெப்பமிருந்த ஒரு நாள் புறப்பட்டு வந்தார்கள் . மக்களும் அந்த கம்பளி ஆடைகளில் வியர்த்துப் போய் இருந்தனர் . அவர்களிடம் இருந்து துர்வாடை கிளம்பி அதன் காரணமாக ஒருவர் இன்னொருவரை சங்கடமடைய செய்தனர் . அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் அந்த வாடையை நுகர நேரிட்டதும் , மக்களே ! இந்த ( ஜும்ஆ ) நாள் வந்து விட்டால் குளித்துக் கொள்ளுங்கள் . உங்களில் ஒருவர் தன்னிடத்தில் எண்ணை மற்றும் வாசனை திரவியங்களில் இருந்து மிகச் சிறந்ததை பூசிக் கொள்வாராக !என்று கூறினார்கள் . இப்னு அப்பாஸ் ( ரலி ) மேலும் கூறுகின்றார்கள் . எவனது திருப்பெயர் உயர்ந்து விட்டதோ , அந்த அல்லாஹ் பொருளாதாரத்தை வழங்கினான் . மக்கள் கம்பளி அல்லாத ஆடைகளை அணியலாயினர் . கடின உழைப்பில் இருந்து காக்கப் பட்டனர் . அவர்களது பள்ளிவாசல் விரிவு படுத்தப்பட்டது . வியர்வையினால் அவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு அளித்துக் கொண்டிருந்த சங்கடமும் தீர்ந்து போனது. 

அறிவிப்பவர் : இக்ரிமா 



தண்ணீரே கிடைக்காத பட்சத்தில மற்றும் நோயாளிகள் தயம்மும் செய்யலாம் 


ஸஹீஹ் புகாரி : 338

'ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து 'நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து 'இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது' எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா?' என்று கேட்டார்கள்' என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார். 




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 








Comments

  1. Marma idathil mudi neekinam kulippu kattayamanadha?

    ReplyDelete

Post a Comment