மிஃராஜ் இரவு

மிஃராஜ் இரவு 




அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..



மிஃராஜ் இரவு என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த நபிக்கும் வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது. இந்தப் பயணம் அதில் உள்ள சம்பவங்கள் எல்லாம் ஒரே இரவில் நடந்தது. இந்த இரவே மிஃராஜ் இரவு ஆகும். அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களை இந்த இரவில் மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து ஜெருசலேத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கும் மற்றும் விண்ணுலகப் பயணம் சென்று வந்த நிகழ்வுகளை திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களில் பார்ப்போம். 



அல்குர்ஆன் : 17:1

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.



ஸஹீஹ் முஸ்லிம் : 259

(ஹதீஸ் சுருக்கம்) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(விண்ணுலகப் பயணத்தின்போது) என்னிடம் கோவேறு கழுதையைவிடச் சிறியதும், கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் எனும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அது பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது கால் குளம்பை எடுத்து (எட்டு) வைக்கும். அதிலேறி நான் பைத்துல் மக்திஸ் (ஜெரூசலேம்) இறை ஆலயம் வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டிவைத்துவிட்டு அந்த இறையாலயத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்பட்ட போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் கொண்டுவந்தார். (அதில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.) நான் பால் பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அப்போது ஜிப்ரீல், "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று கூறினார்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



ஸஹீஹ் புகாரி : 3207

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது' என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்' என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!' என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்' என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்' என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்' என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்' என்றார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்' என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்' என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்' என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்' என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்' என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்' என்று அறிவிக்கப்பட்டது. 



ஸஹீஹ் முஸ்லிம் : 279

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூஹர் (ஸல்) அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக)இரவில் அழைத்துச் செல்லப்பட்ட போது (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா” வரை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அந்த மரத்தில் வேர்பகுதியானது ஆறாம் வானத்தில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் (உயிர்கள், மனிதர்களின் செயல்கள் பற்றிய குறிப்புகள்) யாவும் அங்கு தான் சென்று சேர்கின்றன; அங்கே அவை கையகப்படுத்தப்படுகின்றன.அதற்கு மேலேயிருந்து கீழே கொண்டு வரப்படும் (இறைக்கட்டளைகள்) யாவும் அங்குதான் வந்து சேர்கின்றன; அங்கே (வானவர்களால்) அவை பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

“சித்ரத்துல் முன்தஹா எனும் அம்மரத்தை ஏதோ (பிரமாண்டமான) ஒன்று சூழ்ந்து கொண்டிருக்கிறது” எனும் (53:16 ஆவது) வசனம் தங்கத்தாலான விட்டில் பூச்சிகளையே குறிக்கிறது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்று(கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத்தொழுகைகள் வழங்கப்பட்டன. 2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசனங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


அபூதாவூத் : 4255

விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும், மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ஜிப்ரயீலே! இவர்கள் யார்? என்று நான் கேட்டேன். இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


ஸஹீஹ் புகாரி : 3241

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.

என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.



அல்குர்ஆன் : 17:60

(நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது. 



ஸஹீஹ் முஸ்லிம் : 276

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

(நான் இரவின் சிறு பகுதியில் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மகதிஸ் (ஜெருசலேம்) வரை  சென்று வந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர், அப்போது நான் (கஅபாவில்) “ஹிஜ்ர்” எனும் (வளைந்த பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களைக் குறைஷியருக்கு விவரிக்கலானேன்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



ஸஹீஹ் முஸ்லிம் : 278

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான் (கஅபாவிலோ ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் இருந்தேன். நான் (இரவின் ஒரு சிறு பகுதியில் மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸ் – ஜெருசலேம் வரை) பயணம் மேற்கொண்டது பற்றி என்னிடம் குறைஷியர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பைத்துல் மக்திஸிலுள்ள சில பொருட்களைப் பற்றி என்னிடம் அவர்கள் கேட்டனர். ஆனால், அவை என் நினைவிலிருக்கவில்லை. அப்போது நான் மிகவும் வருந்தினேன். முன்பு எப்போதும் அந்த அளவுக்கு நான் வருந்தியதேயில்லை. உடனே அல்லாஹ் பைத்துல் மக்திஸை எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக்கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றுக்கும் (சரியான) தகவல் தெரிவித்தேன்.

(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர். அங்கு மூசா (அலை) அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் (யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று (உயரமாக) திரண்ட உடல் உள்ள மனிதராக இருந்தார்கள்.அங்கு மர்யமின் மைந்தர் ஈசா அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களிலேயே (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவர் உங்கள் தோழர் (நான்)தான்.

அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைதூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன்.தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், “முஹம்மதே! இதோ இவர்தாம் நகரத்தின் காவலர் மாலிக்.அவருக்கு சலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பிய போது அவர் முந்திக் கொண்டு எனக்கு சலாம் சொல்லிட்டார்.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.




மேலே கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் மூலம் மிஃராஜ் இரவு என்றால் என்ன என்பதையும் அங்கு நபி (ஸல்) அவர்கள் கண்டதையும், சொர்க்கம், நரகம், மேலும் முக்கியமாக தொழுகையை ஐவேளைத் தொழுகையை அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மூலம் விண்ணுலகத்தில் கடமையாக்கப்பட்டதும் புரிந்து கொள்ள முடிகிறது. 


மிஃராஜ் என்ற சம்பவம் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் நம்ப வேண்டிய அல்லாஹ்வின் வல்லமையை அடிப்படையாகக் கொண்ட உண்மையான ஒரு நிகழ்வு. 


மிஃராஜ் சம்பவம் இந்த இரவில்தான் நடந்தது என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் உறுதியாக சொல்லப்படாமல் இருக்கும்போது ரஜப் பிறை 27ஆம் இரவுதான் மிஃராஜ் இரவு என்று முடிவு செய்து கொண்டு அந்த இரவில் தஸ்பீஹ் தொழுகை, சிறப்புநோன்பு, முழுமையடையாத தவறான அர்த்தங்கள் தரும் திக்ருகள்,மவ்லுது, மற்றும் பல நபி ( ஸல்) அவர்கள் சொல்லித்தராத புதுமையான வழிமுறைகளை மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்கள் நன்மை என நினைத்து செய்துவருகின்றனர்.எந்த விஷயத்தை நபி(ஸல்) அவர்கள் செய்யவில்லையோ, நபியவர்களால் சான்று பகரப்பட்ட உம்மத்தின் தலை சிறந்த சான்றோர்களான ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள், 4 இமாம்கள் என யாரும் செய்யவில்லையோ அதை தீனுடைய ஒரு பகுதியாக நிர்ணயிப்பது அல்லது சுன்னத் என்று சொல்வது அதை சுன்னத்தைப் போன்று புழங்குவது பித்அத் ஆகும்.



ஸஹீஹ் புகாரி : 2697

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.



நஸயீ :1560

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் (முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் மிகவும் கெட்டது (மார்க்கம் என்ற பெயரில் ) புதிதாக உருவாக்கக்கூடியவை அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) 



இவையெல்லாம் நற்செயல்தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியை கேட்கிறான்.


அல்குர்ஆன் : 49:16

“நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்க விரும்புகிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும்.




எனவே நாம் மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை காலமெல்லாம் பேணித் தொழக்கூடிய மக்களாக நாம் மாறுவோமாக!

இன்ஷா அல்லாஹ் 



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 












Comments

Post a Comment