ஸதகா - இஸ்லாம்


ஸதகா - இஸ்லாம் 






அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.



ஸதகா என்றால் அல்லாஹ்விடத்தில் நன்மை பெறக்கூடிய பல செயல்களில் முக்கியமான ஒன்றாக உள்ள தான தர்மமும் மற்றும் நல்லறங்கள் அனைத்துமே ஸதகாவாகும். 

 தர்மம் + நல்லறம் = ஸதகா

கடமையான தர்மம் = ஸகாத்

இறந்த பிறகும் நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும் தர்மம் = ஸதகா ஜாரியா


அல்குர்ஆன் : 3:92

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.


தர்மம் செய்பவருக்கு அதைவிட பல மடங்கு அல்லாஹ்விடத்தில் கூலி உண்டு

அல்குர்ஆன் : 2:261

அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை பன் மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹ் அதிகமதிகம் வழங்குபவனும், யாவற்றையும் நன்கு அறிபவனுமாய் இருக்கின்றான்.


பெருமைக்காக தர்மம் செய்யாதீர்கள்

அல்குர்ஆன் : 2:264

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அப்படிச் செய்பவனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித் துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். 


தர்மம் செல்வத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது

  ۙ‏அல்குர்ஆன் : 2:268

(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, நீங்கள் தான தருமங்கள் செய்தால் தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் கிடைக்கும் என்று வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான கொடையுடையவன்; யாவற்றையும் நன்கறிபவன்.


நாம் செய்யும் தர்மம் பிறரையும் தர்மம் செய்ய தூண்டும் சூழ்நிலையாக இருக்குமானால் வெளிப்படையாகவும் தர்மம் செய்யலாம்.

அல்குர்ஆன் : 2:271

தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதையெல்லாம்   அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.


தர்மம் பெற தகுதி உள்ளவர்கள்

அல்குர்ஆன் : 2:273

பூமியில் நடமாடித் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.


கடனும் தர்மமும்

அல்குர்ஆன் : 2:280

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.


சிறந்த தர்மம் 

ஸஹீஹ் புகாரி : 1426

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!'

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


நேர்மையான வருமானம் மூலம் தர்மம் செய்தல்

ஸஹீஹ் புகாரி : 1410

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.'

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


மனைவியின் தர்மத்தில் கணவருக்கும் பங்கு 

ஸஹீஹ் புகாரி : 1425

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை -- வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 


தர்மம் நரகத்திலிருந்து பாதுகாக்கும்

ஸஹீஹ் புகாரி : 1417

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். 


இறந்தவருக்காக தர்மம்

ஸஹீஹ் புகாரி : 2756

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அவரின் தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்தபோது மரணமடைந்துவிட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (பயனளிக்கும்)' என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத்(ரலி), 'நான் என்னுடைய மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தருமம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்' என்று கூறினார்கள். 


மரம் நடுதல்

ஸஹீஹ் புகாரி : 2320

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.


கருமித்தனம் வேண்டாம் 

ஸஹீஹ் புகாரி : 1433

அஸ்மா(ரலி) அறிவித்தார்.

'நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 'நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு வழங்கப்படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!' எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்' எனக் கூறினார்கள் என உள்ளது. 


அர்ஷின் நிழலில் அறம் செய்தவர்கள் 

ஸஹீஹ் புகாரி : 660

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்'

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


சொர்க்கத்தின் ஸதகா வாசல்

ஸஹீஹ் புகாரி : 1897

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

'ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'ஸதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!' என்றார்கள். 


வசதி இல்லாதவர்களுக்கும் தர்மம் உண்டு 

ஸஹீஹ் முஸ்லிம் : 1832

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை தட்டிக் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; ஆனால், அவர்கள் தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்தை) அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே;உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பினைப் பயன்படுத்துகின்ற விதத்திலும் தர்மம் உண்டு" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடைசெய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்" என்று விடையளித்தார்கள்.


உனது செல்வம் 

ஸஹீஹ் முஸ்லிம் : 5665

அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், "மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது" என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன்.

அப்போது அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்" என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?" என்று கேட்டார்கள்.


அல்குர்ஆன் : 63:10

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். 


👆👆👆

மரணம் எப்போது வரும் என்பதை அல்லாஹ்வே அறிவான். மரணம் வரும் முன் அல்லாஹ் நமக்கு கொடுத்த அருட் கொடைகளிலிருந்து ஸதகா (தர்மம்) செய்வோம். 

இன்ஷா அல்லாஹ் 



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 





Comments

Post a Comment