வித்ரு தொழுகை
வித்ரு தொழுகை
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
வித்ரு என்றால் ஒற்றை என்று பொருள்கொண்டது.அல்லது ஒற்றைப்படையானது என்றும் கூறலாம் . இரவில் இஷா தொழுத பின் , இதன் நேரம் தொடங்கி , காலை ' ஃபஜ்ரு தொழுவதற்குச் சற்று முன்வரை உள்ளது . வித்ரு தொழுபவர் ஒற்றைப்படை எண்ணிக்கையில், 1 அல்லது 3,அல்லது,5,7,9,ரக்அத்கள் தொழுது கொள்ளலாம். இரவின் கடைசி தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்வதே சிறந்தது. இருப்பினும் நஃபிலான தொழுகை வித்ரு தொழுகைக்கு பின்னரும் தொழுவதற்கு அனுமதி உள்ளது. அப்படி தொழும் போது மீண்டும் வித்ரு தொழக்கூடாது.
ஸஹீஹ் புகாரி : 998
இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்:
'இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 996
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இரவின் எல்லா நேரங்களிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகிறார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் வரை நீண்டுவிடும்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1344
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விடையளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்; (முதலில்) எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (மூன்று ரக்அத்) வித்ர் தொழுவார்கள்; பிறகு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்; ருகூஉச் செய்ய எண்ணும்போது எழுந்து நின்று, நிலையிலிருந்து ருகூஉச் செய்வார்கள். பிறகு சுப்ஹுத் தொழுகையின் பாங்குக்கும் இகாமத்துக்குமிடையே இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
திர்மிதீ: 432
ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)
நஸயீ :1692
வித்ரு தொழுகை அவசியமானதாகும் . யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும் ; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும் ; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும் ' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர் : அபூஅய்யூப் ( ரலி )
1 ரக் அத் வித்ரு
ஸஹீஹ் முஸ்லிம் : 1363
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். ஆனால், உங்களில் ஒருவர் சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் (வித்ர்) தொழட்டும்! (அவ்வாறு தொழுதால்) அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்" என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1339
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும்வரை வலப் பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர் வந்ததும் எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் புகாரி : 993
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(இரண்டாவது அறிவிப்பாளராகிய) காஸிம், 'மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதை நாம் காண்கிறோம். எல்லாமே அனுமதிக்கப் பட்டது தாம். இதில் எப்படிச் செய்தாலும் குற்றமில்லை என கருதுகிறேன்' என்று குறிப்பிட்டார்கள்.
3 ரக் அத் வித்ரு
முதலில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு மீதி ஒரு ரக்அத்தை தனியாகத் தொழுதல்.
ஸஹீஹ் புகாரி : 991
நாஃபிவு அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளையிடுவார்கள்.
மூன்று ரக்அத்துக்களையும் ஒரு ஸலாம் ஒரு அத்தஹிய்யாத்து மூலம் தொழுதல்:
இரண்டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத் துக்காக அமராமல் மூன்றாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1343
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "ரமளான் மாதத்தி(ன் இரவுகளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை எவ்வாறு இருந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினோரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்; (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை! பிறகு மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்" என்று விடையளித்தார்கள்.
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் கண்கள்தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை" என விடையளித்தார்கள்.
பைஹகீ
" மூன்று ரக்அத்கள் வித்ரு ( தொழுதால் ) மக்ரிபைப் போல் தொழாதீர்கள் " என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் " அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
பைஹகீ
நபி ( ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள் " அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
மூன்று ரக்அத் வித்ரு தொழுகையில் கீழ்க்கண்ட ஸுராக்களை ஓதுவது விரும்பத்தக்கது.
நஸாயீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் குல் யா அய்யுஹல் காஃபிரூன் அத்தியாயத்தையும், மூன்றாம் ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். மேலும் ருகூவுக்கு முன்னர் குனூத் ஓதுவார்கள். வித்ரு தொழுது முடித்த பின் சுப்ஹானல் மலிகுல் குத்தூஸ் எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅபு (ரலி)
5 ரக் அத் வித்ரு
ஐந்து ரக்அத்துகள் வித்ர் தொழுவதாக இருந்தால் இறுதியில் மட்டும் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும். இடையில் அத்தஹிய்யாத்துக்காக அமர வேண்டியதில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் : 1341
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள்; அந்த ஐந்து ரக்அத்தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
7 ரக் அத் வித்ரு
7 ரக் அத் வித்ரு தொழவதாக இருந்தால் இறுதியில் மட்டும் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்கலாம். அல்லது கடைசிக்கு முந்திய ஆறாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் துக்காக அமர்ந்து அத்தஹிய்யாத்து ஓதிய பின்னர் எழுந்து ஏழாவது ரக்அத்தை தொழுது அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்கலாம்.
நஸயீ : 1699
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள் . அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை .
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி )
நஸயீ : 1700
நபி ( ஸல் ) அவர்கள் வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள் . அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை . பின்னர் எழுவார்கள் . ஸலாம் கொடுக்க மாட்டார்கள் . பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள் . பின்னர் ஸலாம் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி )
9 ரக் அத் வித்ரு
9 ரக் அத் வித்ரு தொழவதாக இருந்தால் கடைசிக்கு முந்திய 8வது ரக்அத்தில் அத்தஹிய்யாத் துக்காக அமர்ந்து அத்தஹிய்யாத்து ஓதிய பின்னர் எழுந்து 9வது ரக்அத்தை தொழுது அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1357
ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றிக் கூறுங்கள்?"என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி, தண்ணீர் ஆகியவற்றைத் தயாராக எடுத்து வைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் தான் நாடிய நேரத்தில் எழுப்புவான். அவர்கள் எழுந்து பல்துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் எட்டாவது ரக்அத்தின் இறுதியில்தான் அவர்கள் அமர்வார்கள். பின்னர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு சலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுவார்கள். (ஒன்பதாவது ரக்அத்தில்) உட்கார்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு எங்களுக்குக் கேட்கும் விதத்தில் சலாம் கொடுப்பார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1352
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுவார்கள்; (அப்போது நான் உறங்கிக்கொண்டிருப்பேன்.) அவர்கள் வித்ருத் தொழ எண்ணும்போது, "ஆயிஷா! எழுந்து வித்ரு தொழு!" என்று கூறுவார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறவர் வித்ரு தொழுதுவிட்டு உறங்கட்டும்
ஸஹீஹ் முஸ்லிம் : 1381
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வித்ரு குனூத்
வித்ரு தொழுகையில் கடைசி ரக் அத் ருகூவுக்கு முன் அல்லது பின் குனூத் ஓத வேண்டும்.
நஸயீ
வித்ரு தொழுகையில் ஓதுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில சொற்களை எனக்குக் கற்றுத் தந்தார்கள். அந்தச் சொற்களாவன:
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ،إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ ، تَبَارَكْتَ رَبَّـنَا وَتَعَالَيْتَ
அல்லாஹ்ஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்வைத்த வபாரிக்லீ ஃபீமா அஃதைத்த வகினீ ஷர்ர மா களைத்த ஃப இன்னக தக்ளீ வலா யுக்ளா அலைக்க இன்னஹு லா யதில்லு மன் வாலைத்த வலா யிஸ்ஸு மன் ஆதைத்த தபாரக்த ரப்பனா வதஆலைத்த
பொருள் : யா அல்லாஹ் நீ யாருக்கு நேர்வழி கட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி கட்டுவாயாக! நீ யாருக்கு ஆரோக்கியம் அளித்தாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! மேலும் நீ யாருக்கு பொறுப்பேற்று கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்பாயாக மேலும் நீ எனக்கு அளித்துள்ள செல்வத்தில் அபிவிருத்தி செய்வாயாக! மேலும் நீ அளித்த தீர்ப்பின் தீங்கிலிருந்து என்னை காப்பற்றுவாயாக! ஏனெனில் நீயே தீர்பளிக்கிறாய்! உனக்கு மாற்றமாக தீர்பளிக்கபடுவதில்லை.! நீ யாருக்கு நேசனகிவிட்டாயோ அவர் ஒருபோதும் இழிவடைவதில்லை. மேலும் நீ யாரை பகைத்தாயோ அவர் ஒருபோதும் கண்ணியம் பெறுவதில்லை. எங்கள் இரட்சகனே! நீ அருட்பாக்கியம் உடையவாவனாகிவிட்டாய்! உயர்வு உடையவாவனாகிவிட்டாய்!
அறிவிப்பவர் : ஹஸன்பின் அலி(ரழி)
ருகூவுக்கு பின் குனூத்
பைஹகீ
(கடைசி ரக்கஅத்தில் ருகூவிலிருந்து) தலையை உயர்த்தி ஸஜ்தா தவிர வேறு எதுவும் மிச்சமில்லாத நிலையில் நான் ஓதுவதற்காக அல்லாஹும்மஹ்தினீ..... எனும் குனூத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் (ரலி)
ருகூவுக்கு முன் குனூத்
நஸயீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் குல் யா அய்யுஹல் காஃபிரூன் அத்தியாயத்தையும், மூன்றாம் ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். மேலும் ருகூவுக்கு முன்னர் குனூத் ஓதுவார்கள். வித்ரு தொழுது முடித்த பின் சுப்ஹானல் மலிகுல் குத்தூஸ் எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅபு (ரலி)
நபி(ஸல்) அவர்கள் வித்ரின் கடைசியில் (பின்வருமாறு) ஓதிக்கொண்டிருந்தார்கள்;
நஸயீ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ ، وَأَعُوذُ بِكَ مِنْكَ ، لَا أَحْصِي ثَنَاءً عَلَيْكَ ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
அல்லாஹும்ம இன்னி அஊது பிரிளாக மின் ஸகதிக வபிமுஆஃபாதிக மின் வுகூபதிக வ அஊது பிக மின்க லா வுஹ்ளி ஸனாஅன் அலைக அன்த்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக
பொருள் : யா அல்லாஹ்! நான் உனது பொருத்தத்தை கொண்டு உனது கோபத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். உனது பொறுத்தருளும் பண்பை கொண்டு உனது தண்டனையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உன்னை கொண்டு பாதுகாவல் தேடுகிறேன் உன்னை முழுமையாக புகழ்வதற்கு என்னால் இயலாது. உன்னை முழுமையாக புகழ்வதற்கு என்னால் இயலாது. உன்னை நீ எப்படி புகழ்ந்தாயோ அப்படியே நீ இருக்கிறாய்.
அறிவிப்பவர் :அலி (ரழி),
வித்ரு தொழுகை ஸலாமுக்கு பின்
நஸயீ
سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ ، رَبِّ الْمَلائِكَةِ وَالرُّوحِ
ஸுப்ஹனால் மலிகில் குத்துஸ், ஸுப்ஹனால் மலிகில் குத்துஸ் ஸுப்ஹனால் மலிகில் குத்துஸ் ரப்பில் மலாயிகத்தி வர் ரூஹ்.
பொருள் : புனிதமான அந்த அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்!. அல்லாஹ் வானவர்களுக்கும் ரூஹ் எனும் ஜிப்ரீலுக்கும் அதிபதி ஆவான். (ஸுப்ஹனால் மலிகில் குத்துஸ் என்று மூன்று முறை கூற வேண்டும். மூன்றாவது முறை சற்று நீட்டி இதை கூற வேண்டும்.
அறிவிப்பவர் : உபை பின் கஅபு (ரலி)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Comments
Post a Comment