பள்ளிவாசல்(இறையில்லம்) - இஸ்லாம்
பள்ளிவாசல்(இறையில்லம்) - இஸ்லாம்
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
அரபு மொழியில் ' மஸ்ஜிது ' என்று அழைக்கப்படும் இறை இல்லங்களை தமிழ் மொழியில் ‘ பள்ளிவாசல் ' என்று அழைக்கிறோம்.
ஐவேளைத் தொழுகை , அல்குர்ஆனை ஓதுவது , மனனம் செய்யக் கற்றுத் தருதல் ஆகிய இந்த செயல்கள் மட்டுமே அதிகமாக தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் செய்து கொண்டிருக்கிறோம். இதனால் நம் மார்க்கம் மக்களிடம் முழுமையாக சென்றிருக்கிறதா என்றால். ??? வணக்க வழிபாடுகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும் நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசல் எப்படி இருந்தது என்று தெரிந்து கொண்டு நம்முடைய இலக்கு அதை முன்னோக்கியே இருக்க வேண்டும்.
மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசல் . கல்விக் கூடமாக , பண்புப் பயிற்சியின் பட்டறையாக , ஏழைகளின் தங்குமிடமாக , அநாதைகளுக்கு அடைக்கலமாக , ஆதரவற்றோர்க்கு ஆதரவாக , கைதிகளை அடைக்க சிறைச் சாலையாக , நீதிமன்றமாக , ஆலோசனை அரங்கமாக , நாடாளுமன்றமாக , மருத்துவமனையாக , வழிப்போக்கர்களின் கூடாரமாக , முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தைச் சொல்லும் அழைப்பு மையமாக , மார்க்க அறிஞர்களை உருவாக்கும் மதரஸாக்களாக , ஜகாத்தை திரட்டி விநியோகிக்கும் இடமாக , போர்க் கனிமத்துப் பொருள்களை பங்கு வைத்துக் கொடுக்கும் மைதானமாக , ராணுவத் தளமாக , விளையாட்டுத் திடலாக , மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தீர்ப்பிடமாக , பொருளியல் வாழ்வியல் பிரச்னைக்கு தீர்விடமாக எனப் பலப் பரிமாணங்களில் இருந்தது நபிகளாரின் " மஸ்ஜிதுந்நபவிப் பள்ளிவாசல் .
இதில் உள்ள விடயங்களில் நாம் கவனம் செலுத்தினால் போதும். மேலும் அல்லாஹ்வின் வார்த்தைகளை நம் தாய் மொழியில் புரிந்து கொண்டு மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றக்கூடியவர்களாகவும்.மார்க்கம், குடும்ப மற்றும் சமூக ரீதியான அனைத்து பிரச்சினைகளையும் தீர்வு காண கூடிய அளவிற்கு நம் மஹல்லாவாசிகள் ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றம் ஏற்படும் அளவிற்கு நம் பள்ளிவாசல்கள் அமைய வேண்டும். இன்ஷா அல்லாஹ்
அதற்கு நாம் அனைவரும் ஒரே கொள்கையில் மாறவேண்டும் . அந்தக் கொள்கை , அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆனும் , அவனுடைய தூதரின் சொல் , செயல் , அங்கீகாரமும்தான் . இவற்றை மட்டும் இஸ்லாத்தில் முன்னிறுத்த வேண்டும் . இந்த மூலாதாரங்களை யாருடைய புரிதலுக்கும் உட்படுத்தாமல் நபித்தோழர்களின் புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து , அதனை முதன்மைப்படுத்தி , நாமும் மாறி நம் பள்ளிவாசல்களையும் மாற்றிட வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம்(பள்ளிவாசல்)
ஸஹீஹ் முஸ்லிம் : 1190
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உலகின் முதல் பள்ளிவாசல்
முதல் மனிதரும் , இறைத்தூதருமான ஆதம் (அலை ) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் , மக்காவிலுள்ள கஅபதுல்லாஹ் என்பதையும் மற்றும் உலகின் இரண்டாவது பள்ளிவாசல் பாலஸ்தீனத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் என்பதையும் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.
உலகின் முதல் பள்ளிவாசல்
அல்குர்ஆன் : 3:96
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
உலகின் முதலாவது மற்றும் இரண்டாவது பள்ளிவாசல்
ஸஹீஹ் புகாரி : 3366
அபூ தர்(ரலி) அறிவித்தார்
நான் (நபி(ஸல்) அவர்களிடம்),'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள்,'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்' என்று பதிலளித்தார்கள். நான்,'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள்,'ஜெரூஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று பதிலளித்தார்கள். நான்,'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது' என்று கேட்டேன். அவர்கள்,'நாற்பதாண்டுகள்' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது' என்று கூறினார்கள்.
பல்வேறு காலகட்டங்களில் , இவ்விரண்டு பள்ளிவாசல்களும் மீண்டும் சீரமைக்கப்பட்டன . ஏகத்துவத்தின் தந்தையாக விளங்கும் இப்ராஹீம் நபி ( அலை ) அவர்கள் , தமது மகனார் இஸ்மாயீல் நபி ( அலை ) அவர்களுடன் சேர்ந்து கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பித்துக் கட்டினார்கள் . அதுபோல , சுலைமான் நபி ( அலை ) அவர்கள் பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் புனர்நிர்மானம் செய்தார்கள் .
ஸஹீஹ் புகாரி :3365
(ஹதீஸின் சுருக்கம்)
இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது :
இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒரு முறை இஸ்மாயீல்(அலை) அவர்களைப் பார்த்து வரவேண்டும் போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ்மாயீல்(அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குப் பின் பக்கத்தில் தம் அம்பைச் சீர் செய்து கொண்டிருக்கக் கண்டார்கள். 'இஸ்மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்டவேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்று கூறினார்கள். அதற்கு இஸ்மாயீல்(அலை) அவர்கள்,'அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்' என்று கூறினார்கள். உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம்(அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல்(அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தந்தார்கள். இருவரும் (அப்போது),'இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய் (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் கட்டடம் எழும்பியது. பெரியவர் இப்ராஹீம் அன்னாருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, '(மகாமு இப்ராஹீம்' என்றழைக்கப்படும்) இந்தக் கல் மீது நின்றார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல்(அலை) கற்களை எடுத்துத் தந்தார்கள். இருவரும்'இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்' (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் பள்ளிவாசல் பராமரிப்பு சுலைமான் நபி ( அலை ) அவர்கள் பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் புனர்நிர்மானம் செய்தார்கள் .
நஸாயீ : 686
அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அவர்கள் அறிவிப்பதாவது
" நபி சுலைமான் பின் தாவூது ( அலை ) அவர்கள் பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலைக் கட்டிய போது , மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்விடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்கள் அவற்றுள் ஒன்று , மக்களுக்குத் தீர்ப்பு வழங்கும் போது ) இறைவனின் தீர்ப்புக்கு ஏற்புடைய தீர்ப்பை வழங்கத் தமக்கு ஆற்றல் வேண்டும் என்று மாண்பும் வல்லமையும் மிக்க இறைவனிடம் வேண்டினார்கள் .
(அவர்கள் வேண்டியதுபோல்) அது அவர்களுக்கு வழங்கப்பட்டது . இரண்டாவது தமக்கு வழங்கப்படும் ஆட்சி போன்று தமக்குப் பின்னர் வேறெவருக்கும் வழங்கலாகாது என்று மாண்பும் வல்லமையும் மிக்க இறைவனிடம் கோரினார்கள் . அதுவும் அவர்கள் கோரியது போன்று அவர்களுக்கு வழங்கப்பட்டது மூன்றாவது அப்பள்ளிவாசலைக் கட்டி முடித்தபோது மாண்பும் வல்லமையும் மிக்க இறைவனிடம் , அப்பள்ளிவாசலுக்கு வருகை தந்து தொழும் எவரும் அவரின் பாவங்கள் அகன்று , அன்று பிறந்த பாலகரைப் போன்று மாறிவிட வேண்டும் என்று கோரினார்கள் " என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . '
நபிகளார் கட்டிய முதல் பள்ளிவாசல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு மதீனாவின் வெளியே ஹர்ரா எனும் பகுதியில் மஸ்ஜிதுல் குபாவை முதலில் கட்டினார்கள். பிறகுதான் மதீனா நகருக்குள் சென்று மஸ்ஜிதுன் நபவியை கட்டினார்கள். இதனைக் கீழ்வரும் நபிமொழி விளக்குகிறது.
ஸஹீஹ் புகாரி : 3906
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து வந்த போது அவர்களை மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் கருங்கற்கள் நிறைந்த புறப்பகுதியான ஹர்ராவிலே சந்தித்தார்கள்.)
…அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி ("குபா'வில் உள்ள) பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த - நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராத - அன்சாரிகளில் சிலர் (அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது வெயில் பட்டபோது உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று தமது துண்டினால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது நிழலிட்டார்கள். அப்போது தான் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து "இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை' நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாட்களில்) அந்தப் பள்ளியில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தமது வாகனத்திலேறி பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களது) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது சஅத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த சஹ்ல், சுஹைல் என்ற இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலர வைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் இது தான் (நமது) தங்குமிடம்'' என்று கூறினார்கள். பிறகு அந்த இரு சிறுவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அந்தக் களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், "இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும் போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள்.
அறிவிப்பவர்: சுராகா பின் மாலிக் (ரலி),
சிறப்பு வாய்ந்த பள்ளிவாசல்கள்
நஸாயீ : 693
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
( மக்காவிலுள்ள ) ' மஸ்ஜிதுல் ஹராம் ' , எனது இந்த ( மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் , ஜெருசலேமிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர , வேறெந்தப் பள்ளிக்கும் ( நன்மையை எதிர்பார்த்துப் பயணம் மேற்கொள்ளக் கூடாது . இதை அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் .
பள்ளிவாசல் கட்டுவதின் சிறப்பு
ஸஹீஹ் புகாரி : 450
உபைதுல்லாஹ் அல் கவ்லானி அறிவித்தார்.
உஸ்மான்(ரலி) பள்ளியை விரிவுபடுத்தியபோது 'நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள்' என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு 'அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்' என்று நபி(ஸல்) கூற செவியுற்றுள்ளேன்' என உஸ்மான்(ரலி) கூறினார்.
தஹிய்யத்துல் மஸ்ஜித்
(பள்ளி காணிக்கை தொழுகை )
ஸஹீஹ் புகாரி : 444
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!'
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
பள்ளிவாசல் நிர்வகிக்கத் தகுதியானவர்கள்
அல்குர்ஆன் : 9:18
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
திர்மிதீ
அபூ ஸயீதுல் குத்ரீ ( ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “ இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர் , இறைநம்பிக்கை உள்ளவர் என்று நீங்கள் சாட்சியம் சொல்லுங்கள் " என்று கூறிய மாநபி { ஸல் } அவர்கள் " அல்லாஹ்வின் மீதும் , மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களே ! இறையில்லங்களை நிர்வகிக்கத் தகுதியுடையோர் " என அல்லாஹ் கூறியுள்ளான் , என்று நபி { ஸல் } அவர்கள் கூறினார்கள் .
அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் கிடைக்கப் பெறுபவன்
ஸஹீஹ் புகாரி : 1423
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் நெருக்கம்
ஸஹீஹ் புகாரி : 474.
அபூ வாகித் அல்லைஸீ அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது மூன்று நபர்கள் வந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். ஒருவர் சென்றார். அந்த இருவரில் ஒருவர் (சபையில்) சிறிது இடைவெளியைக் கண்டு அங்கே உட்கார்ந்தார். மற்றவர் சபையினரின் பின்னால் உட்கார்ந்தார். நபி(ஸல்) அவர்கள் (சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி) முடித்தபோது, 'அந்த மூவரைப் பற்றியும் நான் உங்களுக்குக் கூறட்டுமா?' என்று கேட்டுவிட்டு 'ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கினார்; அல்லாஹ்வும் அவரை நெருக்கமாக ஆக்கிக் கொண்டான். மற்றவர் வெட்கப் பட்டார்; அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் வெட்கப் பட்டான் (அதாவது அவரைக் கருணைக் கண் கொண்டு பார்க்கவில்லை) இன்னொருவரோ அலட்சியமாகச் சென்றார்) அல்லாஹ்வும் அவரை அலட்சியம் செய்துவிட்டான்' என்று கூறினார்கள்.
நபி வழியின் வழிமுறைகளை கைவிட்டவராவீர்
ஸஹீஹ் முஸ்லிம் : 1159
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணித் தொழுது வரட்டும். ஏனெனில்,அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுதுகொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுதுவருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள்.
யார் "அங்கத் தூய்மை" (உளூ) செய்து அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்;அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு.
கப்று உள்ள பள்ளிவாசலில் தொழக்கூடாது
ஸஹீஹ் முஸ்லிம் : 1769.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.
இதை அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1765
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1341
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிஸினியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிஸினியா சென்றிருந்த உம்மு ஸலமா(ரலி) உம்மு ஹபீபா(ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி(ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கப்ரின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரின் உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!' என்று கூறினார்கள்.
கப்றோடு இணைந்த பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தொழுவதினால் பிற்காலங்களில் இறைவனைத் தொழும்போது கப்றாளியை எண்ணி அவரிடம் தன் தேவைகளை முறையிடலாம் . கப்றும் , மசூதியும் ஒன்றோடொன்று சேர்ந்திருப்பதனால் பிரார்த்தனைகள் விரைவில் அங்கீகரிக்கப் படலாம் என்பன போன்ற தப்பான எண்ணங்களினால் மனிதன் உந்தப்பட்டுத் தொழுவதற்கு இப்பள்ளியை நாடுவான் . இது அவனை ஷிர்க்கின் பக்கம் ( இறைவனுக்கு இணை வைப்பதின் ) பால் கொண்டு சேர்த்து விடும் . எனவே தான் பெருமானார் ( ஸல் ) அவர்கள் சமாதிகளில் பள்ளி கட்டுவதை கண்டிப்பாகத் தடுத்திருக்கிறார்கள். மேலும் தர்காவில் இருப்பவர்கள் தர்கா க்கு அருகேயே தொழுவதற்காக பள்ளிவாசல் ஒன்றை தர்காவோடு இணைத்து கட்டப்பட்ட பள்ளிகளில் தொழக்கூடாது ஏனெனில் அதன் நோக்கமே தவறானது... மேலும் ஆரம்பம் முதலே இறையச்சத்தின் அடிப்படையில் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்காக கட்டப் பட்ட பள்ளிவாசலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்களை தொழுகை நடத்த செல்ல வேண்டாம் என்று அல்லாஹ் தடுத்த பள்ளிவாசல்
(மஸ்ஜிதுல் லிரார்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் அது வரை மதீனாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த யூதர்களின் தலைமைக்கு ஆபத்து வந்தது.
பெரும்பாலான மக்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டதால் ஆட்சியும் அவர்கள் கைக்கு வந்தது. முஹம்மது நபியை எப்படியாவது கொலை செய்தால் தான் ஆட்சி நம் கைக்கு மீண்டும் வரும் என்று யூதர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள்.
இந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மதீனாவுக்கு வெளியே ஒரு பள்ளி வாசலைக் கட்டினார்கள். தங்களை முஸ்லிம்கள் என்று அறிவித்துக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தங்களின் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து மறைந்திருந்து தாக்கி அவர்களைக் கொல்வது அவர்களின் நோக்கமாக இருந்தது.
பள்ளிவாசலுக்குள்ளே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிக் கொண்டு நபிகள் நாயகத்தை அழைத்தார்கள். தங்கள் பள்ளிவாசலுக்கு வருகை தந்து முதல் தொழுகை தொழுது ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஊருக்கு வெளியே இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதால் இதன் பிண்ணணியில் உள்ள சதித்திட்டம் நபிகள் நாயகத்திற்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவர்களின் சதித் திட்டத்தை அறியாமல் அந்தப் போலிப் பள்ளிவாசலுக்குச் செல்ல ஒப்புக் கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வரும் வசனங்களை இறைவன் அருளினான்.
அல்குர்ஆன் : 9:107
இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
அல்குர்ஆன் : 9:108
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
மேலே கண்ட வசனங்கள் மூலம் நான்கு தன்மைகள் ஒரு சேர உள்ள பள்ளிவாசல்களில் தொழக் கூடாது. மற்றும் பெறும் பாவமான இணைவைப்பு உள்ள பள்ளிகளிலும் தொழக் கூடாது என்பதை புரிந்து கொள்ளலாம். மற்றும் ஆரம்பம் முதலே இறையச்சத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட பள்ளிவாசலில் தொழுவலாம்.
அல்குர்ஆன் : 72:18
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
அல்குர்ஆன் : 4:59
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
எனவே நாம் தொழக்கூடிய பள்ளிவாசல் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அல்லாஹ்வை மட்டும் வணங்கக் கூடிய பள்ளிவாசலாக இருக்க வேண்டும் என்றும் புரிந்து கொண்டு பள்ளிவாசல்களில் இணை வைக்கக் கூடிய மற்றும் பித் அத் ஆன செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகம், நிர்வாகிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இணைவைத்தல், பித்அத் ஆன காரியங்களை ஒழித்து அல்லாஹ்விற்கான இறையில்லங்களாக(பள்ளிவாசல் களாக) மா(ற்)ற வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Comments
Post a Comment