தாடி வைப்பது பற்றி - இஸ்லாம்

தாடி வைப்பது பற்றி - இஸ்லாம் 






அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.



ஸஹீஹ் புகாரி : 5893

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

 

ஸஹீஹ் புகாரி : 5892

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள். 


ஸஹீஹ் முஸ்லிம் : 435

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். அக்னி ஆராதகர் (மஜூசி)களுக்கு மாறு செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 436

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள்.


ஸஹீஹ் புகாரி : 3462

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.


மேலே கண்ட ஹதீஸ்களின் மூலம் மீசையை வளர்க்காமல் மற்றும் மழிக்காமல் அதாவது (shave)செய்யாமல் ஒட்டக் கத்தரிக்க வேண்டும் (Trim).மேலும் தாடியை வளர விட வேண்டும்.தாடியை கத்தரித்து பராமரிக்க வேண்டுமே தவிர ஒட்டக் கத்தரிக்கக் கூடாது என்பதையும் புரிந்து கொள்ளலாம். மேலும் தாடி நரைத்து வெள்ளையாக இருந்தால் கருப்பு அல்லாத சாயம் அல்லது மருதாணி போன்றவை பயன்படுத்திக் கொள்ளலாம்.



தாடி வைத்திருப்பதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

தாடி முகத்தில் ஒரு தடுப்பு மற்றும் வடிகட்டியாக செயல்படுகிறது மற்றும் பலவிதமான நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. சமீபத்திய ஆய்வின்படி , சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு , தாடி தான் பாதுகாக்கிறது என்பது தெரியவந்துள்ளது . இதனால் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளது . நமது சருமத்தில் தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது . எனவே இதனால் ஆஸ்துமா பிரச்சனை வரமால் தடுக்கிறது . மேலும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. தாடி வளர்ப்பதால் , சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் வயதான தோற்றம் தென்பட்டாலும் , உண்மையில் நாம் நீண்ட ஆண்டுகளுக்கு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் . . குளிர்காலங்களில் தாடி வைத்திருப்பதன் மூலம் அதிகமான குளிரை தாங்கிக் கொள்ள முடிகிறது. 


மீசையை ஏன் கத்தரிக்க வேண்டும்

ஆண்களின் மீசையில் அனைத்து வகையான நுண்கிருமிகள் , தூசுக்கள் என உடலை பாதிக்கக்கூடிய காரணிகள் அவனுடைய அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் வேலை பயணம் என அனைத்திலும் கலந்துள்ளது . மீசை நிறைய வைத்துள்ள ஒரு ஆண் உணவு அல்லது நீராகாரம் சாப்பிடும் போது விடும் மூச்சில் மீசையிலிருந்து அப்படியே உணவு பொருளில் கலக்க வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க மீசையை கத்தரிக்கிறார்கள் .


தாடியை ஏன் மழிக்கக் கூடாது 

தாடியை அடிக்கடி மழிப்பதால் புதியதாக உருவாகும் செல்கள் உற்பத்தி குறையும் . இறந்த அந்த செல்கள் மீண்டும் மீண்டும் அதே சருமத்தில் படியும் . படியும் அந்த செல்கள் நாளடைவில் தடித்த சருமத்தையும் , இளம் வயதிலயே முதிர்ச்சி அடைந்த தோற்றத்தை ஏற்படுத்தும் . அத்தோடு இறந்த செல்களை உடலில் தேக்குவதால் தோல் நோய்கள் ஏற்படும் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. 



மேலும் 

தாடி என்பது இயற்கையாகவே நமக்கு கிடைத்த நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான ஒரு விஷயம்.ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வண்ணம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை . தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வண்ணம் படைத்திருப்பான் . தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. மேலும் தாடியை அல்லாஹ்விற்காக மற்றும் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு வளர்த்தோமானால்.. நம் தோற்றம் பார்ப்போருக்கு நம்பிக்கையளிக்கக் கூடியவராக இருக்கும். நமக்கும் தன்னம்பிக்கை உண்டாகும். மேலும்  நம் முகத்தை நாம் பார்க்கும் போதும் பிறர் நம்மை பார்க்கும் போதும் மனதிற்குள் எந்த ஒரு தீய பழக்கத்தையும்  வெளிப்படையாக செய்ய மனம் வராது. பிறரிடத்திலும் மரியாதையாக நடத்தப்படக்கூடிய சூழல் உருவாகும். மேலும் நாம் முழுமையாக ஈமானோடு வாழ வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும்.



அல்குர்ஆன் : 31:22

எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.



மேலும் தோற்றத்திலும் உள்ளத்திலும் முழுமையாக அல்லாஹ்விற்காக வாழ கூடிய வாழ்க்கையை வாழ்வோம். 

இன்ஷா அல்லாஹ் 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 








Comments

Post a Comment