தயம்மும் - இஸ்லாம்
தயம்மும் - இஸ்லாம்
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
தயம்மும் என்றால்
தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பாக நாம் உளூச் செய்வோம். அல்லது பெருந்தொடக்கு ஏற்பட்டிருந்தால் கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம். இந்த இரண்டும் செய்ய முடியாத சூழ்நிலையில் மூன்றாவதாக அல்லாஹ் நமக்கு அருளியுள்ள மண்ணை நாடுவதன் மூலம் தூய்மை படுத்திக் கொள்வதே தயம்மும் ஆகும். எனவே தயம்மும் செய்வதன் மூலம் தொழுகையை நிறைவேற்றலாம்.
உடல் நலம் பாதிப்புக்குள்ளானவர்கள் தண்ணீர் பயன்படுத்தினால் மேலும் உடல்நலம் பாதிக்கும் என்ற சூழ்நிலையில் இருந்தால் தயம்மும் செய்யலாம். வயது முதிர்ந்தவர்கள் தண்ணீர் கிடைத்தும் அதை பயன்படுத்த முடியாத அளவுக்கு தாங்க முடியாத குளிர் இருந்தாலும் அந்நேரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் தயம்மும் செய்யலாம். தண்ணீர் கிடைக்காத இடத்தில் இருந்து தண்ணீர் கிடைக்க கூடிய இடத்திற்கு செல்ல அதிக நேரம் ஆகும் என்றிருந்தால் தொழுகை நேரம் தவறிவிடும் என்றால் தயம்மும் செய்யலாம்.
மண்ணில் தான் தயம்மும் செய்ய வேண்டும் . மண் என்பது அதன் அனைத்து வகைகளையும் குறிக்கும் . களிமண் , மணல் , இறுகிய மண்ணாங்கட்டி , மண் சுவர் போன்ற அனைத்துமே மண்ணில் அடங்கும். மண் என்பது உதிரியாகக் கிடப்பவை மட்டும் அல்ல ; ஒன்று சேர்த்து திரட்டப் பட்டவையும் மண் ' என்பதில் அடங்கும்.
அல்குர்ஆன் : 5:6
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்துத் தேகம் முழுவதையும் சுத்தம் செய்துக் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி உடல் உறவு கொண்டிருந்தாலும் உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
ஸஹீஹ் புகாரி : 348
'ஒருவர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை' என்று கூறியபோது 'மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இம்ரான் இப்னு ஹுஸைன் அல் குஸாயீ(ரலி) அறிவித்தார்.
தயம்மும் செய்யும் முறை
ஸஹீஹ் புகாரி : 338
'ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து 'நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து 'இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது' எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா?' என்று கேட்டார்கள்' என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார்.
சுவற்றில் தயம்மும்
ஸஹீஹ் புகாரி : 337
'நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் சென்றோம். 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பீர்ஜமல்' என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று அதில் கையை அடித்து தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள்' என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார்' என உமைர் என்பவர் அறிவித்தார்.
கடும் குளிரில் தண்ணீர் பயன்படுத்தினால் மரணம் ஏற்படும் என்று அஞ்சினால்
ஸுனன் அபூதாவூத் : 334
அம்ர் இப்னுஸ் ஆஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் : தாதஸாலாஸில் என்ற படையெடுப்பின் போது கடுங்குளிரான இரவில் ( உறங்கும் போது ) கனவு கண்டு நான் ஜுனுபாகி விட்டேன் . நான் குளித்தால் மரணமடைந்து விடுவேனோ ? என்று அஞ்சினேன் . எனவே நான் தயம்மம் செய்து எனது தோழர்களுக்கு சுப்ஹ் தொழுகை நடத்தினேன் . இதை பிறகு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் எடுத்துரைத்தனர் . அப்போது அவர்கள் ( என்னை நோக்கி ) அம்ரே ! நீ ஜுனுபாக இருக்கும் போது உனது தோழர்களுக்கு தொழுகை நடத்தினாயா ? என்று வினவினார்கள் . நான் அவர்களிடம் என்னை குளிப்பதிலிருந்து தடுத்து விட்ட நிகழ்ச்சியை அவர்களிடம் தெரிவித்தேன் . மேலும் நான் , உங்களை நீங்கள் கொன்று விடவேண்டாம் . அல்லாஹ் உங்களிடம் கருணை உள்ளவனாக இருக்கின்றான் என்று அல்லாஹ் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்றும் தெரிவித்தேன் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் சிரித்தார்கள் . மேலும் அவர்கள் வேறு எதையும் கூறவில்லை என்று இப்னுல் முஸன்னா அறிவிக்கின்றார்கள் .
தயம்மும் எப்போது கடமையாக்கப்பட்டது
ஸஹீஹ் புகாரி : 334
நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். 'பைதாவு' அல்லது 'தாத்துல் ஜைஷ்' என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, '(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை' என்று முறையிட்டனர். அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 'நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயத்தின் வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.
இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)' எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்'என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தகுந்தது
ஸஹீஹ் புகாரி : 335
'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
அல்குர்ஆன் : 50:8
(இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Comments
Post a Comment