மீலாது நபி விழா & மௌலிது
மீலாது நபி விழா & மௌலிது
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
இஸ்லாமிய காலண்டரில் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதம் 12ம் நாள் நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள் என்று முஸ்லிம்களில் சிலர் நம்புகின்றனர்.ஆனால் அதற்கு எந்த ஆதாரபூர்வமான செய்தியும் கிடையாது.ஆனாலும் முஸ்லிம்களில் சிலர் நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ரபிவூல் அவ்வல் மாதம் 1 முதல் 10 வரை நபி (ஸல்) அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக மௌலிது ஓதியும். 12ம் நாளில் நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மீலாது நபி விழா என்றும் கொண்டாடி வருகின்றனர்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர் ( ஸல் ) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் உள்ளதா என்றால் இல்லை.
நபி ( ஸல் ) அவர்களோ, மற்ற நபித்தோழர்களோ, மீலாது விழா கொண்டாடினார்கள் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள் பிறந்த நாளை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள் மட்டும் இல்லை இறந்த நாளும் இந்நாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இச் செயல் பற்றி ஹதீஸ்களின் மூலம் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்
அல்குர்ஆன் : 3:31
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன் : 47:33
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்ட அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்
ஸஹீஹ் முஸ்லிம் : 3540
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் சாபம்
ஸஹீஹ் முஸ்லிம் : 2656
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனா புனித நகரமாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றைப் புகுத்துகின்றானோ, அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கூடுதலான வழிபாடு மற்றும் கடமையான வழிபாடு எதையும் மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இஸ்லாமிய மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டது.
ஸஹீஹ் புகாரி : 45
யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர்(ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.
'இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தியுடன் அங்கீகரித்துக் கொண்டேன்' (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்' என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.
மீலாது விழாவும் கிறிஸ்துமஸ் விழாவும்
ஈசா (நபி) பிறந்தநாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது போல் நபி(ஸல்) அவர்கள் பிறந்தநாளை மீலாது விழா என்று கொண்டாடினால் பிற மதக் கலாச்சாரத்தை பின்பற்றுவதாகும்
அபூதாவூத்
பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி ( ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள் .
அபூதாவூத் : 1134
நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனா வாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விளையாடுபவர்களாக இருந்தார்கள் . அப்போது நபி ஸல் அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள் . அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில் தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் . அதற்கு நபி ஸல் அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள் .
அறிவிப்பவர் :அனஸ் பின் மாலிக் (ரழி)
ஸஹீஹ் முஸ்லிம் : 4600
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் முன்னிலையில் இருந்தபடி கூறினார்கள்: நான் எனது ("அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தினருகில் உங்களில் என்னிடம் வருபவர் யார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னிடம் நெருங்கவிடாமல் தடுக்கப்படுவர். அப்போது நான் "இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்" என்று கூறுவேன். அதற்கு இறைவன், "இவர்கள் உமக்குப் பின்னால் செய்ததை நீர் அறியமாட்டீர். இவர்கள் தம் குதிகால்கள்மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தனர்" என்று கூறுவான்.
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வந்த எச்சரிக்கை
அல்குர்ஆன் : 2:120
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
மௌலிது
மௌலிது என்றால் பிறந்தநாள் என்று பொருள். நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள் கொண்டாடும் விதமாக சுப்ஹான மௌலிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள். நபி(ஸல்) அவர்களை கண்ணியப் படுத்துகிறோம் என்று கூறி இதை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடி , புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது . நபி ( ஸல் ) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன . நபி ( ஸல் ) அவர்களிடம் உதவிதேடுவது , அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது , அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான ( இறைவனுக்கு இணைவைக்கும் ) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.
கவிதைகள்
ஸஹீஹ் முஸ்லிம் : 4548
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்" எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று" என்று கூறினார்கள்.
அல்குர்ஆன் : 26 : 224 - 226
இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.
பள்ளிவாசல் அல்லாஹ்விற்கே உரியது.
அல்குர்ஆன் : 72:18
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
ஈசா (நபி)யை புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டது போல் என்னை புகழ வேண்டாம் என
நபி (ஸல்) அவர்கள்
ஸஹீஹ் புகாரி : 3445
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
'நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
நோயை குணப்படுத்துபவன் அல்லாஹ் ஒருவனே. அவன் நாடினால் மட்டுமே குணமடையும்.
ஸஹீஹ் புகாரி : 5675
ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்' அல்லது 'நோயாளி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்' அவர்கள், 'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.
மேலும் மௌலிது வரிகள் தமிழ் அர்த்தங்களோடு மற்றும் எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபி மொழிகள்
👇🏾👇🏾👇🏾
எனவே இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்ட மீலாது நபி விழா மற்றும் மௌலிது மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தில் முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ , உழைப்பாலோ , ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவ வேண்டாம்.
மற்றும்
👇🏾👇🏾👇🏾
அல்குர்ஆன் : 3:104
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Comments
Post a Comment