தொழுகையில் இடைவெளி விட்டு நிற்பது பற்றி- இஸ்லாம்
தொழுகையில் இடைவெளி விட்டு நிற்பது பற்றி- இஸ்லாம்
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
தொழுகையின் வரிசையில்(ஸஃப்பில்) இடைவெளி விட்டு தொழுவது தவறு என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் COVID-19 என்னும் கொரோனா நோயின் அச்சத்தாலும் நாட்டின் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளதால் தொழுகையின் வரிசை (ஸஃப்) பற்றிய ஹதீஸ்களை காண்போம்.பிறகு நாம் என்ன முடிவு எடுக்க வேண்டும். என்பதை நாமே நமக்குள் கேட்டுக் கொள்வோம்.
ஸஹீஹ் புகாரி : 723
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'வரிசையை ஒழுங்கு படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்கு படுத்துவது தொழுகையை நிலை பெறச் செய்வதாகும்.'
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 719
அனஸ்(ரலி) அறிவித்தார்.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, 'வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின் புறமாகவும் உங்களை நான் காணுகிறேன்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 717
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.'
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
மலக்குகளின் அணிவகுப்பு
ஸுனன் அபூதாவூத் : 661
மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் முன்னிலையில் மலக்குகள் அணிவகுப்பது போன்று நீங்கள் அணிவகுக்க வேண்டாமா ? என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் சொன்ன போது , மலக்குகள் தங்கள் இறைவனின் முன்னிலையில் எப்படி அணிவகுத்து நிற்பர் ? என்று நாங்கள் கேட்டோம் . அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் முந்தைய வரிசைகளை பூர்த்தி செய்வார்கள் . வரிசையில் ( இடைவெளி இல்லாது ) ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள் என ஜாபிர் பின் சமூரா ( ரலி ) அறிவிக்கின்றார்.
உள்ளங்களில் ஏற்படும் சீர்குலைவு
ஸுனன் அபூதாவூத் : 662
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் தனது திருமுகத்தால் மக்களை நோக்கி " உங்களுடைய வரிசைகளை சீர்படுத்துங்கள் ' என்று மூன்று முறை சொல்லி விட்டு , அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுடைய அணிகளை சீர் செய்யுங்கள் அல்லது அல்லாஹ் உங்களுடைய உள்ளங்களில் சீர்குலைவை ஏற்படுத்துவான் என்று நபி ( ஸல் ) அவர்கள் குறிப்பிட்டார்கள் . இவ்வாறு சொன்ன மாத்திரத்தில் தனது தோள் புஜத்தை தனது தோழரின் தோள் புஜத்துடனும் தனது முட்டை தன் தோழரின் முட்டோடும் , தனது கரண்டைக் காலை தனது தோழருடைய கரண்டைக் காலுடன் ஒட்டி வைத்ததை நான் கண்டேன் என நுஃமான் பின் பஷீர் ( ரலி ) அறிவிக்கின்றார் .
முகங்கள் மாற்றியமைக்கப்படும்
ஸுனன் அபூதாவூத் : 663
நபி ( ஸல் ) அவர்களிடமிருந்து ஒழுங்கு முறையை புரிந்து நாங்கள் கடைபிடித்து விட்டோம் என்று அவர்கள் எண்ண தலைப்படும் வரை அம்பை சீர் செய்வது போல் எங்களது வரிசைகளை சீர் செய்வார்கள் . ஒரு நாள் அவர்கள் தனது திருமுகத்தால் எங்களை நோக்கி பார்க்கும்போது , தனது நெஞ்சை முன்னால் நிமிர்த்திக் கொண்டு ஒருவர் நின்றிருந்தார் . உடனே அவர்கள் " நீங்கள் உங்கள் வரிசைகளை சரிப்படுத்துங்கள் அல்லது உங்களுடைய முகங்களை மாற்றியமைத்து விடுவான் என்று சொன்னார்கள் என நுஃமான் பின் பஷீர் ( ரலி ) அறிவிக்கின்றார்.
அல்லாஹ்வின் அருளும் மலக்குகளின் துஆ வும்
ஸுனன் அபூதாவூத் : 664
எங்களுடைய மார்புகளை தோள் பட்டைகளை தொட்டுக் கொண்டே ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் வரை ( சரி செய்து கொண்டும் ) அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் உள்ளே நுழைவார்கள் . ( முந்தியும் பிந்தியும் நின்று ) வேறுபட்டு விடாதீர்கள் . உங்களுடைய உள்ளங்களும் வேறுபட்டு விடும் என்றும் முதல் வரிசையில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்கின்றான் . மலக்குகள் அருள் செய்யுமாறு பிரார்த்திக்கின்றார்கள் என்றும் சொல்வார்கள் என பர்ராஃ பின் ஆஸிப் ( ரலி ) அறிவிக்கின்றார் .
ஷைத்தானின் நுழைவு
ஸுனன் அபூதாவூத் : 667
உங்களுடைய அணிகளில் நேர்ந்து நில்லுங்கள் . ஒரணிக்கும் இன்னொரணிக்கும் ( இடைவெளி இல்லாமல் ) நெருங்கி நில்லுங்கள் . உங்கள் கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள் . என்னுடைய ஆத்மா எவன் கைவசமுள்ளதோ அவன் மீது சத்தியமாக ! நிச்சயமாக ஷைத்தான் அணியின் இடைவெளிகளில் சிறிய ஆட்டுக் குட்டியைப் போன்று நுழைவதை நான் பார்க்கின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் என அனஸ் பின் மாலிக் (ரலி ) அறிவிக்கின்றார்கள்.
வரிசையில் குறை இருப்பின் அது கடைசி வரிசையாக இருக்கட்டும்
ஸூனன் அபூதாவூத் : 671
முதல் வரிசையை ( முதலில் ) முழுமைப் படுத்துங்கள் . பிறகு அடுத்து வரும் வரிசையை முழுமைப்படுத்துங்கள் . ஏதாவது குறை ஏற்படின் அது கடைசி வரிசையில் ஏற்படட்டுமாக என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கின்றார்கள் .
வரிசையில் தூண்கள் அமைந்தால்
ஸுனன் அபூதாவூத் : 673
ஜும்ஆ தினமன்று அனஸ் பின் மாலிக் ( ரலி ) யுடன் தொழுதேன். (நெருக்கடியின் காரணமாக ) தூண்களின் பக்கமாக சென்று முந்தியும் , பிந்தியும் நின்றோம் . இதை கண்ட அனஸ் ( ரலி ) அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் காலத்தில் இது போன்று நிற்பதை தவிர்த்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னார்கள் என மஹ்மூத் அறிவிக்கின்றார்.
தொழுகையை மீண்டும் தொழுவும் படி உத்தரவிட்டார்கள்
ஸுனன் அபூதாவூத் : 682
வரிசைக்கு பின்னால் ஒருவர் தன்னந்தனியாக தொழுவதை கண்ட அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் அவரை மீட்டும்படி கட்டளையிட்டார்கள் என வாபிஸா ( ரலி ) அறிவிக்கின்றார்கள் . சுலைமான் பின் ஹர்ப் தொழுகையை ( மீட்டும் படி உத்தரவிட்டார்கள் ) என்று அறிவிக்கின்றார்கள்.
இறுதி சமூகத்தாராகிய நாம்
ஸஹீஹ் முஸ்லிம் : 906
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறுதி சமுதாயத்தாராகிய) நாம் மூன்று விஷயங்களில் (மற்ற) மக்கள் அனைவரை விடவும் சிறப்பிக்கப்பட்டுள்ளோம்:
1.நம் (தொழுகை) வரிசைகள் வானவர்களின் (தொழுகை) வரிசைகளைப் போன்று (சீராக) ஆக்கப்பட்டுள்ளன.
2. நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. (தொழுகைக்காக "அங்கத் தூய்மை" செய்ய) நமக்குத் தண்ணீர் கிடைக்காதபோது தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சிறப்பையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேலே நாம் கண்ட ஹதீஸ்களின் மூலம் தொழுகையின் வரிசை(ஸஃப்) பற்றி முழுமையாக அறிந்து கொண்டோம்.
COVID-19 நோய் காரணமாக நாட்டின் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொழுகையில் இடைவெளி விட்டு தொழுவது ஹதீீஸ்களிலும் வரலாறுகளிலும் இல்லாத காரணத்தால் சில மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுத்து பல்வேறு நாடுகளிலும் அதை பின்பற்றுகின்றனர்.
ஆனால் தொழுகையின் சட்டப்படியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்: என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்று கூறியதற்கும் மாறாகவே இருப்பதால் நாம் தக்வா என்னும் இறையச்சத்தை பின்பற்றி தொழுகையில் இடைவெளி இல்லாமல் தொழுவது தான் சிறந்தது.
தற்போது இதற்கு ஏற்ற சூழலை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். தொழுகையின் சட்டதிட்டங்களை முழுமையாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். COVID-19 ல் இருந்து சாதாரண நிலை உருவாகும் வரை வீட்டிலோ வேலை பார்க்கும் இடத்திலோ முடிந்த வரை ஜமாத்தோடு இடைவெளி இல்லாமல் தொழுவலாம். பள்ளிவாசல்களிலும் குறைந்த நபர்களோடு இடைவெளி இல்லாமல் தொழுவலாம். கொரோனா அச்சத்தாலோ, நாட்டின் கண்காணிப்பு குழு, விமர்சனம் என்று நம்மை சிரமத்திற்கு உட்படுத்திக் கொள்ளாமல். இறையச்சத்தோடு அல்லாஹ்வின் முன் நிற்போம். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
ஸஹீஹ் புகாரி : 39
'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Comments
Post a Comment