நின்றுகொண்டு தண்ணீர் அருந்த வேண்டாம் - இஸ்லாம்

நின்றுகொண்டு தண்ணீர் அருந்த வேண்டாம் - இஸ்லாம் 




அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.



நின்றுகொண்டு தண்ணீர் அருந்த தடை 

ஸஹீஹ் முஸ்லிம் : 4118

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.



ஸஹீஹ் முஸ்லிம் : 4116

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?" என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது" என்று கூறினார்கள்.



நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் நின்று கொண்டு அருந்தியற்கான ஹதீஸ்கள் 

ஸஹீஹ் புகாரி : 5615

நஸ்ஸால் இப்னு சப்ரா(ரஹ்) கூறினார்

அலீ(ரலி) (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள்.

பிறகு 'மக்களில் சிலர் நின்றுகொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால், (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் செய்ததை பார்த்தேன்' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் முஸ்லிம் : 4120

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அருந்துவதற்கு ஸம்ஸம் தண்ணீரைக் கொடுத்தேன். அதை அவர்கள் நின்றுகொண்டு அருந்தினார்கள்.



மேலே நாம் கண்ட ஹதீஸ்களின் மூலம் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்த தடை செய்தார்கள்.தடை என்று வந்து விட்டாலே அந்த செயலை நாம் செய்ய கூடாது. அல்லாஹ்வின் கடைசி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை நாம் கடைப்பிடிக்கவேண்டும். மேலும் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதாக வந்துள்ள ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு தண்ணீர் அருந்தும் முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவா அல்லது பின்பாகவா என்பதை அல்லாஹ்வே அறிவான். ஆகவே நாம் நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் வேண்டுமானால் நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாம். மற்றபடி தண்ணீரை உட்கார்ந்து கொண்டு அருந்த வேண்டும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கருணையன்புடையோனுமாகவும் இருக்கின்றான். 



நின்றுகொண்டு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் 

ஆர்த்ரிடிஸ்,இரைப்பை, குடல் பாதை பாதிப்பு,சிறுநீரக பாதிப்பு,அஜீரணம், நெஞ்செரிச்சல், எலும்பு சிதைவு,நரம்பு மண்டலம் பாதிப்பு, மேலும் தாகமும் தணிக்காது. 


உட்கார்ந்து கொண்டு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் 

தண்ணீரை நாம் உட்கார்ந்து குடித்தால் உடலில் உள்ள ஆசிடிட்டி அளவு நீர்த்து போகும் மற்றும் உடலுக்குள் சரியான கலவையில் நீரானது சென்று உடலை புத்துணர்ச்சியோடு வைக்கும் .


எனவே நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான முறையை பின்பற்ற வேண்டும். 

பிஸ்மில்லாஹ் சொல்லி தண்ணீர் சுத்தமாக உள்ளதா என்று பார்த்து உட்கார்ந்து கொண்டு பாத்திரத்தின் வெளியில் மூன்று முறை மூச்சு விட்டு வலது கையை உபயோகப்படுத்தி தண்ணீரை  உமிழ் நீருடன் கலந்து மெதுவாக அருந்த வேண்டும். அருந்திய பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று கூற வேண்டும். 


ஸஹீஹ் முஸ்லிம் : 4124

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பருகும்) பாத்திரத்தினுள் மூச்சு விட வேண்டாமெனத் தடை செய்தார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4125

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பருகும்போது) மூன்று முறை பாத்திரத்தி(ற்கு வெளியி)ல் மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4126

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள். மேலும், "இதுவே நன்கு தாகத்தைத் தணிக்கக்கூடியதும் (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றதும் அழகிய முறையில் செரிக்கச் செய்யக்கூடியதும் ஆகும்" என்று கூறினார்கள்.

ஆகவேதான், நானும் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வருகிறேன்.



ஸமூது கூட்டத்தினர்கள் நபி ஸாலிஹ்(அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்க மறுத்து சாதாரண மனிதரே என்று கூறினர். இறைத்தூதர் என்பதற்கு அத்தாட்சி கேட்ட போது நபி ஸாலிஹ்(அலை) அவர்கள் கூறியது. 

அல்குர்ஆன் : 26:155

அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”




நாம் சில நேரங்களில் சில பொதுவான இடங்களில் உட்கார்ந்து குடித்தால் நம்மை மற்றவர்கள் வித்தியாசமாக கவனிப்பார்கள். அதை பொருட்படுத்தாமல் அல்லாஹ் நம்மை கவனிப்பான் என்று உணர்ந்து உட்கார்ந்து கொண்டு தண்ணீர் அருந்த வேண்டும். மாற்று மத சகோதரர்கள் வேடிக்கையாக பார்ப்பார்கள். அவர்களுக்கும் தண்ணீர் அருந்தும் முறையும் அதில் உள்ள அறிவியலையும் கற்றுத் தரலாம்.நாமும் பின்பற்றி நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கலாம். 

இன்ஷா அல்லாஹ்





அல்குர்ஆன் : 2:209

தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 






Comments