எண்ணம் போல் வாழ்க்கை - இஸ்லாம்

எண்ணம் போல் வாழ்க்கை - இஸ்லாம் 





அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.



நிய்யத்(எண்ணம்) =நம் உள்ளத்தில் நாம் செய்ய போகின்ற செயல்களின் நோக்கத்தை எண்ணுவது தான் நிய்யத் ஆகும். நிய்யத்(எண்ணம்) வாயால் மொழிதல் கூடாது. அது சப்தமாகவிருந்தாலும் சரி அல்லது சப்தமில்லாமல் இருந்தாலும் சரி. முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் நிய்யத்தை ( எண்ணம் ) வாயால் மொழிந்தார்கள் என்ற செய்திகள் எதுவும் பதிவாகவில்லை.



நம் எண்ணங்களை பொருத்தே நம் செயல்கள் 

ஸஹீஹ் புகாரி : 6953

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மக்களே! எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். தாம் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்திற்காக, அல்லது தாம் மணக்க விரும்பும் பெண்ணுக்காக ஹிஜ்ரத் செய்கிறவருடைய ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.

இதை உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் சொற்பொழிவாற்றும்போது அறிவித்தார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 5012

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அல்குர்ஆன் : 3:29


(நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”



பிறர் மீதும் பிறர் செய்யும் செயல்கள் மீதும் சந்தேகமான எண்ணம் கொள்ள வேண்டாம். 

அல்குர்ஆன் : 49:12

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.


ஸஹீஹ் புகாரி : 5143

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள். 



மனிதர்களின் எண்ணங்களுக்கு அருகில் ஷைத்தான். 

ஸஹீஹ் புகாரி : 3281

ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். -உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்' என்றார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், 'அல்லாஹ் தூயவன் இறைத்தூதர் அவர்களே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான்.. அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்' என்றார்கள். 



 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்று கூறுவோம்

அல்குர்ஆன் : 7:201

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.



எண்ணங்களை பொறுத்தே மறுமையில் கூலி

ஸஹீஹ் முஸ்லிம் : 3865

சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "ஆம் (தெரிவிக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:

மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்" என்று பதிலளிப்பார்.

இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, "மாவீரன்" என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்" என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)"அறிஞர்" என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; "குர்ஆன் அறிஞர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்" என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய் "இவர் ஒரு புரவலர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)" என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.


நாம் செய்ய நினைக்கும் நல்ல எண்ணங்களுக்கே அல்லாஹ்விடம் கூலி உண்டு 

ஸஹீஹ் புகாரி : 7501

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.



நம் வாழ்க்கையில் இஸ்லாத்தின் முக்கியமான ஐந்து கடமைகளில் நம் எண்ணம் எப்படி இருக்கிறது என்று  நம்மை நாமே அறிந்து கொள்ள வேண்டும். 

1.கலிமா

முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் அறிந்ததே. அந்த கலிமா வில் நம் எண்ணம் சரியாக இருக்க வேண்டும்.

2.தொழுகை

 நம் எண்ணம் பர்ளு, சுன்னத், நஃபில் நாம் என்ன தொழ போகிறோம் என்பதை எண்ண வேண்டும். தொழுகையில் இறையச்சத்தோடு அல்லாஹ் நம் தொழுகையை கவனிக்கிறான் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு அல்லாஹ்விற்காக தொழுக வேண்டும்.

3. நோன்பு 

ரமலான், அரஃபா, ஆஷூரா, எந்த நோன்பு நோற்கிறோம் என்பதையும் உள்ளத்தில் எண்ண வேண்டும். நோன்பு நோற்கும் போதும் நோன்பின் போதும் நோன்பு திறக்கும் போதும் அல்லாஹ்விற்காக என்பதை உள்ளத்தில் எண்ண வேண்டும்.

4.ஸகாத்

நாம் ரமலான் மாதம் கொடுக்கக் கூடிய ஸகாத். இஸ்லாம் சட்டப்படி சரியான அளவாக ஸகாத் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்றோ, பெருமைக்காகவோ நம் ஸகாத் இல்லாமல் அல்லாஹ்விற்காக ஸகாத் கொடுக்கிறோம் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்க வேண்டும். 

5. ஹஜ் 

ஹஜ் செய்வதற்கு உண்டான பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை.    ஹஜ் செய்யக் கூடியவர்கள் ஹஜ் ஜின் கிரியைகளையும், சட்டங்களையும், வரலாறுகளையும் முழுமையாக அறிந்து கொண்டு அல்லாஹ்விற்காக ஹஜ் செய்கிறேன் என்று உள்ளத்தில் எண்ணம்(நிய்யத்) வைப்பது சிறந்தது. 



நம் வாழ்க்கையில் நம் எண்ணம் உயர்வாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். உடல் நலம், கல்வி, வேலை,விளையாட்டு, அரசியல்,லட்சியம், எதுவாக இருந்தாலும் சரி நம் எண்ணம் நிறைவேற.. நம்பிக்கை, மன உறுதி,   விடா முயற்சி,நல்ல எண்ணம், அல்லாஹ்விடம் கேட்க கூடிய துஆ அனைத்திலும் உறுதியான எண்ணம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

 இன்ஷா அல்லாஹ்



அல்குர்ஆன் : 17:84

(ஆகவே, நபியே!) நீங்கள் கூறுங்கள்: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவைகளையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 





Comments

  1. உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் அற்புதமாக உள்ளது. இன்னு பல தலைப்புகளில் பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இன்ஷா அல்லாஹ். துஆ செய்யுங்கள்.

      Delete
  2. This is very useful for bayan(speech).
    I need more and more topics like this....

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  4. Alhamdulillah innum ithu pondru pala vidayangalai arinthukolla aarvam kondullom in sha allah athiga athigama pagirvugalai ethirpaarkirom allah ungalukum ungal kudumbathaarkkum arul purivaanaaga melum sorgathai allah ungaluku vazhanguvaanaaga aameen.......

    ReplyDelete
    Replies
    1. As salaamu alaikkum warahmathullahi wabarakathuhu. Jazakallahu khairan. Nalla padhivai thara muyarchikiren insha Allah.Dua seinga.

      Delete

Post a Comment