மரணம் - இஸ்லாம்

மரணம் - இஸ்லாம் 






அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.



மரணம் என்பது நிச்சயமானது. மரணம் வருவதற்கு என்று எந்த காலமும், நேரமும் இல்லை . அது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் , எத்தனை வயதில் வேண்டுமானாலும் வரலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் வாழும் காலம் குறுகிய காலம் என்று உணர்ந்த பிறகும் மரணத்தை பற்றியும் அதன் பிறகு வரும் மறுமை பற்றியும் கவனக்குறைவாகவே உள்ளோம், மரணத்தை மறந்தவர்களாகவும், மரணத்தை பற்றிய சிந்தனையே இல்லாமல் நாம் இருக்கின்றோம்.

 இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்.




அல்குர்ஆன் : 21:35

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.



மரணம் நிச்சயம் 

அல்குர்ஆன் : 4:78

   நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!”



உயிரைக் கைப்பற்றுபவர்

அல்குர்ஆன் : 32:11

“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  



மரணத்திற்கு பின் அல்லாஹ்விடம் மீட்கப்படுவோம்

அல்குர்ஆன் : 62:8

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.



ஒருவருக்கு மரண நேரம் நெருங்கிய போது நாம் எதுவும் செய்ய இயலாமல் திகைத்து நிற்போம். 

அல்குர்ஆன் : 56: 83-85

மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -

அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.



தீயவர்களுக்காக

அல்குர்ஆன் : 4:18

இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.



அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்கு

அல்குர்ஆன் : 4:100

இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.



கால தவணை 

அல்குர்ஆன் : 63:11

      அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.


அல்குர்ஆன் : 63:10

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.


அல்குர்ஆன் : 16:61

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடித்துத் தண்டிப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களைப் பிடிக்காது பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.



மரணத்தை விரும்ப வேண்டாம் 

ஸஹீஹ் முஸ்லிம் : 5206

ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வருவதற்கு முன்பே அதை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒருவர் இறந்துவிட்டால்,அவரது (நற்)செயல் நின்றுவிடுகிறது. இறைநம்பிக்கையாளருக்கு அவரது ஆயுள் நன்மையையே அதிகமாக்கும்.



கலிமா

ஸஹீஹ் முஸ்லிம் : 1673

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" (எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.




மரணம் தீயவர்களுக்கு சீக்கிரமும் நல்லவர்களுக்கு தாமதமாகவும் தான் வரும் என்றெல்லாம் இல்லை. மேலும் முதுமையில் தான் மரணம் வரும் என்று நினைத்து கொண்டு அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காகவே நம் காலத்தை செலவழிக்காமல் மறுமைக்காகவும் நம் நேரங்களை நல் அமல்களின் மூலம் பயனுள்ளதாக ஆக்குவோம். 

 நம் வாழ்க்கை சரியான பாதையில் செல்ல வேண்டுமென்றால் தொழுகையை சரியாக கடைபிடித்தாலே போதும். 

👇🏾👇🏾👇🏾


திர்மிதி : 378 

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான் . அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான் . அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான். 

அறிவிப்பவர் :அபூஹூரைரா ( ரலி ) 



அல்குர்ஆன் : 15:99

உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 




Comments

Post a Comment