ஆஷூரா நோன்பு


ஆஷூரா  நோன்பு 







அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.



ஆஷூரா  நோன்பு என்பது  முஹர்ரம் மாதத்தின் பிறை 10 ஆம் நாளில் நோற்க வேண்டிய சுன்னத்தான நோன்பாகும்.மேலும் யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்பதால். நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாறு செய்யும் விதமாக முஹர்ரம் மாதத்தின் பிறை 10 ஆஷூரா தினமும் மற்றும் அதற்கு முந்தைய நாள் பிறை 9 ஆம் நாளிலும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். 



ஸஹீஹ் முஸ்லிம் : 2072 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்றுவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்புவரை முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்றனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஹர்ரம் பத்தாவது நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்; நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்பதை விட்டுவிடலாம்" என்றார்கள். 



ஆஷூரா தினம் மற்றும் நோன்பின் காரணம் 

ஸஹீஹ் முஸ்லிம் : 2082

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது குறித்து யூதர்களிடம் வினவப்பட்டபோது, "இந்த நாளில்தான் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கும் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கும் பிர்அவ்னுக்கெதிராக இறைவன் வெற்றியளித்தான். எனவே,இந்நாளைக் கண்ணியப்படுத்தும் முகமாகவே நாங்கள் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என யூதர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களைவிட மூசாவுக்கு அதிக நெருக்கமுடையவர்கள் நாங்களே" என்று கூறிவிட்டு, ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.



ஆஷூரா நோன்பின் சிறப்புகள் 

ஸஹீஹ் புகாரி : 2006

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

'ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!' 


ஸஹீஹ் முஸ்லிம் : 2151

(ஹதீஸின் சுருக்கம்) 

அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


ஆஷூரா தினம் கஅபாவிற்கு திரையிடப்படும் நாளாக இருந்தது

ஸஹீஹ் புகாரி : 1592

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, '(ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதைவிட்டுவிட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 



ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன்பு ஆஷூரா நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். 

ஸஹீஹ் முஸ்லிம் : 2091

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி "(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்" என்று அறிவிக்கச்செய்தார்கள்.

நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்.


யூதர்களின் பெருநாள் 

ஸஹீஹ் முஸ்லிம் : 2084

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹர்ரம் பத்தாவது நாளை (ஆஷூரா) யூதர்கள் கண்ணியப்படுத்தியும் பண்டிகை நாளாகக் கொண்டாடியும் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!" என்றார்கள்.



யூதர்களுக்கு மாறு செய்யும் விதமாக ஆஷூரா தினம் மற்றும் முஹர்ரம் 9ம் நாளிலும் நோன்பு. 

ஸஹீஹ் முஸ்லிம் : 2088 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 2089

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்" என்று இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்" அதாவது ஆஷூரா நாளில்" எனும் குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.




எனவே நாம் அனைவரும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியபடி முஹர்ரம் மாதம் பிறை 9 & 10 ஆகிய நாட்களில் ஆஷூரா நோன்பு நோற்போம்.

 இன்ஷா அல்லாஹ் 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 





Comments