கோபம் பற்றி இஸ்லாம்
கோபம் பற்றி இஸ்லாம்
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
கோபம் என்பது மனிதனின் குணங்களில் மிகவும் ஆபத்தானது. இந்த கோபம் ஏற்படும் போது ஆரம்ப நிலையிலேயே நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஷைத்தான் புகுந்து விடுவான். கோபம் என்றால் நெருப்பு அது நமது அறிவை இழக்க செய்துவிடும் மோசமான வார்த்தைகளை பேசவைத்துவிடும், குடும்பத்தினர்கள் , உறவுகள் மற்றும் நண்பர்கள் நம்முடைய கருணையின்மீது நம்பிக்கை இழக்க செய்துவிடும் . நற்பண்புகளை பாழ்படுத்திவிடும்.எனவே கோபத்திலிருந்து நம்மை பாதுகாக்க பொறுமையை கடைப்பிடிக்க அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்.
அல்குர்ஆன் : 42:37
இறை நம்பிக்கையாளர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
அல்குர்ஆன் : 3:134
பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
ஸஹீஹ் புகாரி : 6114
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6116
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு' என்று அறிவுரை கூறினார்கள். அவர் அறிவுரை கூறுங்கள்' எனப் பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு' என்றே சொன்னார்கள்.
கோபம் ஏற்படும் போது கூற வேண்டியது
ஸஹீஹ் புகாரி : 6115
சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்.
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
(சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி(ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்' என்றார்.
கோபத்தினால் 3 நாட்களுக்கு மேல் பேசாமலிருக்காதீர்கள்
ஸஹீஹ் புகாரி : 6065
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(ஸலாமன்) கூறி கோபத்திலிருந்து வெளியேறுங்கள்
ஸஹீஹ் புகாரி : 6077
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.
என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.
மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொள்ளுங்கள்
ஸஹீஹ் புகாரி : 6032
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்' என்று (என்னிடம்) கூறினார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டீர்களே' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரின் தீங்கை அஞ்சி மக்கள் அவருடன் இயல்பாகப் பழகாமல் விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவராவார்' என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்த தீயவரிடமே மலர்ந்த முகத்துடன் இயல்பாக நடந்து கொண்டார்கள். நாம் கோபத்தின் காரணத்தினால் வீட்டிற்கு வந்தவர்களிடம் சரியாக பேசாமல் கவனிக்காமல் இருக்க வேண்டாம். மலர்ந்த முகத்துடன் இயல்பாக அனுகி உபசரிக்க வேண்டும்.
கோபத்தில் பிறரை கண்டிக்க கூட நளினத்தை கடைப்பிடியுங்கள்
ஸஹீஹ் புகாரி : 6031
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்' என்றே கூறுவார்கள்.
கோபத்தில் தீர்ப்பளிக்க வேண்டாம்
ஸஹீஹ் புகாரி : 7158
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்பவருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்கவேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).
மார்க்க விஷயத்தில் கண்டித்த நபி (ஸல்) அவர்கள்
ஸஹீஹ் புகாரி : 7159
அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.
ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுகை நடத்துவதால் அதிகாலைக் கூட்டுத் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்துவிடுகிறேன்' என்றார். நபி(ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், 'மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். எனவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுகை நடத்தினாலும் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர்' என்றார்கள்.
கோபம் ஏற்படும் போது செய்ய வேண்டியது
ஸுனன் அபூதாவூத் : 4782
உங்களில் ஒருவருக்கு நிற்கும் போது கோபம் வந்தால் அமர்ந்து கொள்ளட்டும் . அப்போதும் போகவில்லையானால் அவர் படுத்துக்கொள்ளட்டும் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர் : அபூதர் ( ரலி )
ஸுனன் அபூதாவூத் : 4784
‘ நிச்சயமாக கோபம் ஷைத்தானின் குணம் . ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டான் . நீரைக் கொண்டுதான் நெருப்பை அணைக்க முடியும் . எனவே உங்களில் ஒருவர் கோபப்பட்டால் ஒளு ( உறுப்புக்களை நீரால் கழுவி சுத்தம் ) செய்து கொள்ளட்டும் ' என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பாளர் : அதிய்யா ( ரலி )
அல்குர்ஆன் : 7:201
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
அல்குர்ஆன் : 3:200
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
எனவே நாம் அனைவரும் அனைத்து சூழ்நிலைகளிலும் கோபத்தை அடக்கி கொள்ளவும். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்தும் பொறுமையுடனும் ஷைத்தானிடமிருந்தும் பாதுகாவல் தேட அல்லாஹ்வை நினைவு கூறுவோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
الحمدلله - this is very useful for my speech (bayan) - جزاكم الله خيرا
ReplyDeleteAs salaamu alaikkum warahmathullahi wabarakathuhu. Jazakallahu khair
Deleteو عليكم السلام ورحمة الله وبركاته
DeleteNice
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு
ReplyDelete