ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்


ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்





அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 


இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது நம் மீது கடமையாகும் .


அல்குர்ஆன் : 4:103

நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது படுத்திருக்கும் நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் ஆபத்தினின்று விடுபட்டு அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.



ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்


ஸஹீஹ் முஸ்லிம் : 1075

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹுத் தொழுகையின் நேரம்:

வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது. 
(சூரியன் உதித்துவிட்டால் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் அது உதயமாகிறது.) 

லுஹ்ர் தொழுகையின் நேரம்:

 சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்குச் சமமாக ஆகி, அஸ்ர் நேரத்திற்கு முன்புவரை உள்ளது.


ஸஹீஹ் முஸ்லிம் :1076

அஸ்ர் தொழுகையின் நேரம்:

சூரியன் பொன்னிறமாகி அதன் விளிம்பு மறைவதற்கு முன்புவரை உள்ளது. 

மஃக்ரிப் தொழுகையின் நேரம்:

சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது.


ஸஹீஹ் முஸ்லிம் :1073

இஷாத் தொழுகையின் நேரம்:

செம்மேகம் மறைந்ததிலிருந்து நள்ளிரவு வரை உள்ளது. 

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அல்லாஹ்விற்கு விருப்பமான செயல் 

ஸஹீஹ் புகாரி : 527

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்' என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்' என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள். 


தொழக்கூடாத நேரங்கள் 


ஸஹீஹ் முஸ்லிம் : 1511

உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.
1.சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை,
2.ஒருவர்உச்சிப் பொழுதில் நிற்கும்போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும்வரை.
3.சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும்வரை.


தூக்கம் & மறதிக்கு மட்டும் தொழுகை நேரம் தவறிவிட்டால் 


ஸஹீஹ் முஸ்லிம் : 1218

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழாமல் உறங்கிவிட்டால், அல்லது கவனமில்லாமல் இருந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில், "என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக' என (20:14ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறுகின்றான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


தொழுகையை தவறவிட்டால் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். 

அல்குர்ஆன் : 19:59 -19:60

இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய ஸாலிஹானவர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.



ஜமாஅத்துடன் தொழுவதின் சிறப்பு:

ஸஹீஹ் முஸ்லிம் : 1147

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்.


தொழுகையின் முக்கியத்துவம் 


அல்குர்ஆன் : 4:102

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.


ஸஹீஹ் புகாரி : 1117

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
எனக்கு மூலம் இருந்தது. எவ்வாறு தொழுவது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ நின்று தொழு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு' என்று விடையளித்தார்கள். 

👆👆👆

மேலே கண்ட ஹதீஸ்கள் மூலம் கடமையான தொழுகையின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு ஐவேளைத்
 தொழுகைகளை உரிய நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டும். அல்லாஹ் இந்த கடமையான தொழுகைகளிலும் பல சலுகைகளை வழங்கியுள்ளான். 
தொழுகையின் நேரங்களில் ஜமாத்தோடு தொழுவதற்கு முடியாவிட்டாலும் தொழுகையின் ஆரம்ப நேரம் முதல் இறுதி நேரம் வரை தனியாக தொழுது கொள்ளலாம். (ஜும்ஆ வை தவிர்த்து) 
மேலும் பயணங்களில் ஜம்வு,கஸ்ர் சேர்த்து தொழலாம் , சுருக்கி தொழலாம்.
பூமி அனைத்தும் தூய்மையான தொழுமிடமாகவும் அல்லாஹ் ஆக்கி உள்ளான். 


ஸூனன் அபூதாவூத் : 489

 பூமி ( அனைத்தும் ) தூய்மையானதாகவும் , தொழுமிடமாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் என அபூதர் ( ரலி ) அறிவிக்கின்றார். 

ஸஹீஹ் முஸ்லிம் : 1063

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்துகொண்டவர் அந்தத் தொழுகையையே அடைந்துகொண்டவராவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


பயணத்தில் மேற்கொள்ளப்படும் தொழுகை 
(ஜம்வு, கஸ்ர்) 


ஸஹீஹ் முஸ்லிம் : 1231

ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஷுரஹ்பீல் பின் அஸ்ஸிம்த் (ரஹ்) அவர்களுடன் பதினேழு அல்லது பதினெட்டு மைல் தொலைவிலிருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் இரண்டு ரக்அத்களே தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான் அது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நான் கண்டேன். உமர் (ரலி) அவர்களிடம் நான் அதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்கிறேன்"என்றார்கள்.

சேர்த்துத் தொழுவுதல்(ஜம்வு) 

ஸஹீஹ் முஸ்லிம் : 1266

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் லுஹ்ர் தொழுகையை அஸ்ரின் ஆரம்ப நேரம்வரைத் தாமதப்படுத்தி, லுஹரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள்; மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து செம்மேகம் மறையும்போது தொழுவார்கள்.

சுருக்கித் தொழுவுதல்(கஸ்ர்) 


ஸஹீஹ் முஸ்லிம் : 1236

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மினாவில், பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத்) தொழுதார்கள். (அவ்வாறே) அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (தொழுதார்கள்). உஸ்மான் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) "எட்டு ஆண்டுகள்" அல்லது "ஆறு ஆண்டுகள்" (அவ்வாறே தொழுதார்கள்).(இதன் அறிவிப்பாளரான) ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு தமது படுக்கைக்கு வருவார்கள். அப்போது அவர்களிடம் நான், "என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (கடமையான) இந்தத் தொழுகைக்குப் பின் (கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தொழுதால் என்ன!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் (அவ்வாறு) தொழுவதாயிருந்தால் கடமையான தொழுகையை (நான்கு ரக்அத்களாகவே) முழுமைப்படுத்தியிருப்பேன்" என்று சொன்னார்கள். 



ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் 

ஸஹீஹ் முஸ்லிம் : 2334
(ஹதீஸின் சுருக்கம்) 


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள்
 ( ஹஜ்ஜின் போது ) அரஃபாவுக்குப் புறப்பட்டார்கள் . ( அங்கு ) நமிரா அருகில் அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள் அங்கு இறங்கி , சூரியன் நடுவானிலிருந்து மேற்கு நோக்கிச் சாயும் வரை தங்கினார்கள் . ( பின்னர் ) கஸ்வா எனும் ( தம் ) ஒட்டகத்தை ஆயத்த நிலையில் வைக்குமாறு கட்டளையிட்டார்கள் . அதன்படி அவர்களுக்கு வாகனம் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டது அங்கிருந்து புறப்பட்டு , " பத்னுல் வாதி ” எனும் பள்ளத்தாக்கு வந்தபோது அங்கு இறங்கி மக்களுக்கு உரையாற்றினார்கள் . பின்னர் 
பிலால் ( ரழி ) அவர்கள் ( லுஹ்ருத் தொழுகை நேரத்தில் ) தொழுகை அழைப்பு(பாங்கு) விடுத்து , இகாமத் சொன்னார்கள் . 
நபி ( ஸல் ) அவர்கள் லுஹ்ரைத் தொழவைத்தார்கள் . அதன் பின்னர் பிலால் ( ரழி ) இகாமத் சொல்ல
 நபி ( ஸல் ) அவர்கள் அஸரைத் தொழவைத்தார்கள் அவ்விரண்டு தொழுகைக்கிடையே வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை. 
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரழி )


ஸஹீஹ் முஸ்லிம் : 2334  

(ஹதீஸின் சுருக்கம்)


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவை அடைவதற்காகப் புறப்பட்டார்கள் . “ முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரு பாங்கும் இரு இகாமத்துகளும் கூறி மக்ரிப் , இஷாவையும் ( சேர்த்துத் ) தொழவைத்தார்கள் ” அவ்விரண்டுக்குமிடையே
 ( கூடுதலாக ) வேறெதுவும் தொழவில்லை. 
 அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரழி )





அல்குர்ஆன் : 2:277

யார் ஈமான் கொண்டு, 
நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.


எனவே நாம் அனைவரும் 
அல்லாஹ் நமக்கு கொடுத்த வாழ்க்கையில் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி ஐவேளைத் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும். வேலையின் காரணமாக ஐவேளைத் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற முடியவில்லை என்று வருந்துபவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் அல்லாஹ் அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் நமக்கு இலேசாகி வைப்பான் என்று அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக விடை பெறுகிறேன். 



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 






Comments