அரஃபா தினம் & நோன்பு
அரஃபா தினம் & நோன்பு
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
அரஃபா தினம் இஸ்லாமிய
நாட்காட்டியில் பன்னிரண்டாவது மாதமான துல்ஹஜ் மாதம் 9ம் நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. அரஃபா தினத்தில் மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர்கள் அரஃபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஒன்று கூடி பாவமன்னிப்பு கேட்பார்கள். அரஃபா தினம் அன்று
ஹஜ் செல்ல வசதி இல்லாதவர்கள் அரஃபா தினத்தில் அவரவர் இடத்திலேயே நோன்பு நோற்கலாம்.
ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் இந்த அரஃபா தினமாகும்.
இஸ்லாம் மார்க்கம் முழுமை அடைந்த இடம் அரஃபா
ஸஹீஹ் புகாரி : 45
யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர்(ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.
'இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தியுடன் அங்கீகரித்து கொண்டேன்' (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்' என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களின் இறுதி உரை
ஸஹீஹ் புகாரி : 1739
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'மக்களே! இது எந்த நாள்?' எனக் கேட்டார்கள். மக்கள் 'புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இது எந்த நகரம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் 'இது எந்த மாதம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க மாதம்!' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!' எனப் பல முறை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, 'இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?' என்றும் கூறினார்கள்.
என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அவ்விறைவன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.
பின்னர் 'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த கேட்டேன்' என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
நரக விடுதலை அளிக்கும் நாள்
ஸஹீஹ் முஸ்லிம் : 2623
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். "இவர்கள் எதை நாடி இங்கு குழுமியுள்ளார்கள்?" என்று பெருமிதத்தோடு கேட்கிறான்.
அரஃபா நோன்பின் நன்மை
ஸஹீஹ் முஸ்லிம் : 2151
அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?" என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும்வரை இவ்வாறு பல முறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் "(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்" அல்லது "அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்க, "இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, "அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்" என்று கூறினார்கள். பிறகு, "மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1661
உம்முல் ஃபழ்ல் பின்த் அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது சம்பந்தமாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். சிலர், 'நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்' என்றும் இன்னும் சிலர், 'இல்லை' என்றும் கூறிக் கொண்டிருந்தனர். எனவே நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பாலைக் கொடுத்தனுப்பினேன்; அவர்கள் தங்களின் ஒட்டகத்தின் மீதமர்ந்து கொண்டே அதைக் குடித்தார்கள்.
ஹஜ் செய்பவர்களுக்கு நோன்பு தடை
இப்னுமாஜா : 1722
அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
அரஃபா நாளில் தல்பியாவும் & தக்பீரும்
ஸஹீஹ் முஸ்லிம் : 2459
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (அரஃபா நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாவிற்குச் சென்றோம். அப்போது எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்...) கூறிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறிக்கொண்டிருந்தனர்.
அல்குர்ஆன் : 2:198
(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
அரஃபா தினம் ஒரு நோன்பு மட்டுமே துல்ஹஜ் மாதம் 9ம் நாள் பிறை பார்த்து நோன்பு நோற்க வேண்டும். அரஃபா தினம் நோன்பு வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலும் ஒரு நோன்பு நோற்கலாம். வெள்ளிக்கிழமை விசேஷமாகக் கருதி நோன்பு நோற்க வேண்டாம் என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமைக்கு முன்பு அல்லது பின்பு நோன்பு நோற்க சொன்னார்கள். ஆகவே சுன்னத்தான அரஃபா நோன்பு நோற்பதில் தவறில்லை. மேலும் பேணுதல் காரணமாக அரஃபா நாள் முன்பும் நோன்பு நோற்கலாம். பின்பு நோற்க கூடாது.. ஹஜ் பெருநாளாகும். நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள்களில் நோன்பு நோற்பதற்கு தடை செய்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1985
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2103
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவைமட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் அரஃபா தினத்தில் நம் அனைவரும் நோன்பு நோற்க அல்லாஹ் அருள் புரிவானாக.
இதில் காணப்படும் நிறைகளுக்கு அல்லாஹ் அருள் செய்யவும் குறைகளை மன்னிக்கவும் பிரார்த்தனை செய்கின்றேன். மேலும் அரஃபா தினம் மற்றும் நோன்பு சம்பந்தப்பட்ட ஹதீஸ்களை கருத்து பிரிவில் பதிவு செய்யலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
Comments
Post a Comment