குர்பானி (உழ்ஹிய்யா)


குர்பானி (உழ்ஹிய்யா) 





அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.




குர்பானி என்றால் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள்.. ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில் இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அல்லாஹ்வின் கட்டளையின் அடிப்படையில் ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்து பலியிடுவது குர்பானி(உழ்ஹிய்யா) ஆகும். 





குர்பானியின் பின்னணி

அல்குர்ஆன் : 37 : 100-111

 அல்குர்ஆன் : 37:100

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).


அல்குர்ஆன் : 37:101

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.


அல்குர்ஆன் : 37:102

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”



அல்குர்ஆன் : 37:103

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;


அல்குர்ஆன் : 37:104

நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.



அல்குர்ஆன் : 37:105

“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.



அல்குர்ஆன் : 37:106

“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”



அல்குர்ஆன் : 37:107

ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.



அல்குர்ஆன் : 37:108

இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:


அல்குர்ஆன் : 37:109

“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!


அல்குர்ஆன் : 37:110

இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.


அல்குர்ஆன் : 37:111

நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.





அல்குர்ஆன் : 22:37

 குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு  இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!


அல்குர்ஆன் : 108:2

உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.



குர்பானி கொடுப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். 

ஸஹீஹ் முஸ்லிம் : 3998

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது,
 (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கும் கொடுங்கள் 

அல்குர்ஆன் : 22:28

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்லி குர்பான் கொடுப்பவர்களாகவும் வருவார்கள் எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.



குர்பானி ஆண் மற்றும் பெண் பிராணிகளும் கொடுக்கலாம்

அல்குர்ஆன் : 6:143

(நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக.



பெருநாள் தொழுகைக்கு பிறகு தான் குர்பானி பிராணி அறுக்க வேண்டும். 


ஸஹீஹ் புகாரி : 5545

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்
(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், 'இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் பெருநாள் தொழுகை தொழுவோம்; பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப்பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். பெருநாள் தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த சாதாரண இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள்.
உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்து விட்டிருந்த) அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, '
(இறைத்தூதர் அவர்களே!) என்னிடம் ஒரு வயதுடைய (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது' என்று கூறினார்கள்.
'(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழி முறையைப் பின்பற்றியவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 




ஸஹீஹ் புகாரி : 5552

இப்னு உமர்(ரலி) கூறினார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள். 



ஸஹீஹ் புகாரி : 5553

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். நானும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்தேன். 




பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் கூறி பிராணியை அறுக்க வேண்டும்.

ஸஹீஹ் புகாரி : 5565

அனஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு அறுத்தார்கள்.


அல்குர்ஆன் : 22:34

இன்னும் கால்நடைப்பிராணிகளிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம்) போன்றவற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காகவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!



குறைகள் உள்ள பிராணிகளை அறுக்க கூடாது

நஸயீ : 4293

" நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையல்ல . வெளிப்படையாகத் தெரியக் கூடிய குருட்டுத் தன்மை , வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய் , வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம் , கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது " என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
 " அல்லாஹ்வின் தூதரே ! கொம்பில் ஒரு குறை , பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை " என்று கூறினேன் . அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் " உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு ! மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே " என்று கூறினார்கள் .
அறிவிப்பவர் : பரா ( ரலி )  




கூர்மையான கத்தியால் அறுக்க வேண்டும் 

ஸஹீஹ் முஸ்லிம் : 3955

ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.




குர்பானி பிராணியின் வயது


ஸஹீஹ் புகாரி : 5560

பராஉ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை கேட்டேன். அவர்கள் (தம் உரையில்) 'நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்கவேண்டும். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள்.
அப்போது அபூ புர்தா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'முதலில் அறுத்ததற்கு பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் 'அது செல்லாது' அல்லது 'நிறைவேறாது' என்று பதிலளித்தார்கள்.



கூட்டுக் குர்பானி (7பேர்)

ஸஹீஹ் முஸ்லிம் : 2538

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.



குர்பானி தோல்,இறைச்சியை கூலியாக கொடுக்க கூடாது

ஸஹீஹ் முஸ்லிம் : 2536

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை 
அறுத்துப் பலியிடும் பொறுப்பைக் கவனிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மேலும் அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் ஏழைகளிடையே பங்கிடுமாறும், உரிப்பதற்கான கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.




ஒட்டகம் அறுக்கும் முறை 

ஸஹீஹ் முஸ்லிம் : 2545

ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்து அறுத்துக் கொண்டிருந்தபோது அவரிடம் சென்று, "இதைக் கிளப்பி அதன் இடப்பக்க முன் காலை மடக்கிக் கட்டி, நிற்கவைத்து அறுப்பீராக! அதுவே உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்" என்று கூறினார்கள்.



இறைச்சிகளை விநியோகித்தல்

ஸஹீஹ் புகாரி : 5569

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில் காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள். 




அல்குர்ஆன் : 16:128

நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 



Comments