குடிப்பழக்கம் பற்றி இஸ்லாம்
குடிப்பழக்கம் பற்றி இஸ்லாம்
அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
அன்பார்ந்த சகோதரர்களே ¡
உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவுக்கு முக்கிய காரணமாக இந்த குடிப்பழக்கம் தான் உள்ளது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மட்டும் இல்லாமல் சமூகத்தில் ஏற்படும் தற்கொலை,கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், கொலை, திருட்டு,சாலை விபத்துகள்,குடும்ப பிரச்சினைகள் அனைத்திற்கும் ஆணிவேராக இந்த குடிப்பழக்கம் உள்ளது.
இளைஞர்களின் சிந்திக்கும் திறனை முற்றிலுமாக மலுங்கடித்துக் கொண்டிருக்கிறது. நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவதற்கு இந்த குடியே போதும் என்ற அளவிற்கு மிகப்பெரிய தீயதாகும்.
அல்குர்ஆன் :5:90
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் : 5:91
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
இப்னுமாஜா : 3371
தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும் . தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்.
இப்னுமாஜா : 3392
அதிக அளவில் பயன்படுத்தினால் போதை தரும் எந்த பொருளும் குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது ' என நபி ( ஸல் ) அவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் பின் உமர் அறிவிக்கிறார்கள்.
இப்னுமாஜா : 3380
மதுபானங்கள் அருந்துபவர்கள் மாத்திரம் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அல்ல . மதுபானங்கள் அருந்துவதில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால்சபிக்கப்பட்டவர்களே .
1. மதுபானம் தயாரிப்பவன் -
2. யாருக்காக மதுபானம் தயாரிக்கப்பட்டதோ , அவன்
3. மதுபானங்களை குடிப்பவன் -
4 . மதுபானங்களை விற்பனை
கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்.
5 . யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ , அவன்
6. மதுபானங்களை பரிமாறுபவன்
7. மதுபானங்களை விற்பவன் ,
8. மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன் ,
9. மதுபானங்களை வாங்குபவன் ,
10 . மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ , அவன்
ஆகிய பத்து சாரார் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது.
என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் சொன்னதாக நபித்தோழர் அனஸ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மது மருந்தல்ல நோய்
ஸஹீஹ் முஸ்லிம் : 4015
வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு மது தயாரிப்பதைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், "மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல; நோய்" என்றார்கள்.
மது அருந்துபவர்களுக்கு மறுமையில்
ஸஹீஹ் முஸ்லிம் : 4075
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள "ஜைஷான்" எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒருவகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது போதையளிக்கக்கூடியதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (போதையளிக்கக்கூடியதே)" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) "தீனத்துல் கபாலை" நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்" என்று கூறினார்கள்.
மக்கள் "அல்லாஹ்வின் தூதரே! "தீனத்துல் கபால்" என்பது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்" என்று விடையளித்தார்கள்.
மது அருந்துபவர்களை சபிக்காதீர்கள் அல்லாஹ்வை நினைவு படுத்துங்கள்.
ஸஹீஹ் புகாரி : 6780
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்' என்று கூறினார்கள்.
மது அருந்தியவர்கள் திருந்தி பாவமன்னிப்பு கேளுங்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4076
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார். - இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்
அல்குர்ஆன் : 4:17
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
குடிப்பழக்கத்தால் உடலுக்கும் உயிருக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அந்த தீய பழக்கத்தில் ஏதோ ஒரு காரணத்தால் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் அவர்களின் சகோதரர்களாகிய நாம் அவர்களை படிப்படியாக தீய பழக்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
ReplyDeleteஆமீன்
DeleteWaalaikum Assalam Wa Rahamathullahi Wa Barakkadhahu
ReplyDelete